தன்னலம் துறக்க தயாராவோம்!
இயேசுவின் சீடர்களாய் வாழ விரும்புகின்றவர்களுக்கு தன்னலம் துறத்தல் என்பதை முக்கியமான பண்பாய் முன்வைக்கிறது இன்றைய நற்செய்தி. தன்னலம் துறத்தல் சீடத்துவத்திற்கான அடிப்படை நிபந்தனை. தம்மைப் பின்பற்றுபவர்களும் தன்னைப்போல தன்னலம் துறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.
இன்றைய உலகில் தன்னலம் தலைவிரித்தாடும் போக்கு தாராளமாய் உண்டு. இங்கு தன்னலம் என்பதனைப் பல்வேறு புதுப்பது வடிவங்களாக ஏராளமாய்ப் பார்க்க முடியும். நான், எனது, என்னுடைய என்கிற குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு குரூர சிந்தையும், கொடூர வாழ்க்கையும் நம்முடையதாகிவிட்டது. ஆண்டவரையும், அடுத்தவரையும் அப்புறப்படுத்திவிட்டு தன்னை மட்டுமே மையப்படுத்தி வாழும் வாழ்வுமுறை பெருகிவிட்டது.
‘சுயநலம் தீய ஒழுக்கம்! சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!" என்கிறார் விவேகானந்தர். ஆம், தன்னலம் என்பது ஒழுக்கக் கேடு. தன்னலம் குற்றங்களைக் குவிக்கும் குப்பைத்தொட்டி. ஆகவே தன்னலத்தை தவிடுபொடியாக்குவோம். தன்னலமற்ற நிலையே தெய்வத்தின் முன் நம்மை அவருக்குரியவர்களாக அடையாளப்படுத்தும். தன்னலம் என்னும் சிறைக்குள் ஆயுள் கைதிகளாய்; காலம் தள்ளும் நிலையில் பலர் இன்று இருக்கிறோம். தன்னலம் சொகுசான சிறைவாசம். ஆனால் அதுவே நம் வாழ்க்கையை தொலைத்துக் கட்டிவிடும். எனவே தன்னலச் சிறையிலிருந்து விடுதலை பெறுவோம்.
தன்னலத்தால் நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகைச் சொந்தமாக்கிவிடலாம். ஆனால் அதனால் நாம் நம்முடைய வாழ்வைத் தொலைத்துவிடுவோம் என்பதை மறக்க வேண்டாம். எனவே தான் இயேசு சொல்கிறார்: ‘ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?’
தன்னலம் நம் உயிரைக் காத்துக்கொள்ளச் சொல்லும். ஆனால் பொதுநலம் நம் உயிரை இழக்கச் சொல்லும். ஆனால் இறுதியில் என்ன ஆகும்? இயேசுவின் வார்த்தைகளில் பார்க்கிறோம்: ‘தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என் பொருட்டு தம் உயிரை இழக்க விரும்பும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்’.
தன்னலம் என்பது சயனைடு தடவிய சாக்லெட் போன்றது. காப்பாற்றுவது போன்று தெரியும், ஆனால் காவு வாங்கிவிடும். இனிப்பது போன்று தெரியும், ஆனால் வாழ்க்கையை கசக்கச் செய்துவிடும். எனவே இயன்ற வழிகளில் எல்லாம் தன்னலம் துறக்க தயாராவோம்.