இயேசுவோடு செல்வோம்! இயேசுவாக மாறுவோம்!
மாற்கு 9: 2-10
கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றும் நாம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறோம். கிறிஸ்தவர்கள் என்கிற இந்த வார்த்தையின் பொருள் நமக்குப் புரிந்துள்ளதா? கிறிஸ்தவன் (கிறிஸ்து + அவன்) அல்லது கிறிஸ்தவள் (கிறிஸ்து + அவள்) என்று சொல்லும் போது நாமே மறு கிறிஸ்துவாக மண்ணில் நடமாடும் பொறுப்பை இப்பெயர் நமக்கு வழங்கியுள்ளது என்பதை உணர்ந்துள்ளோமா? இயேசு கிறிஸ்துவின் பாசறையில் பயிற்சி பெறும் நம் அனைவருக்கும் அவரைப் போன்று வாழ வேண்டிய கடமையும் பொறுப்பும் மிகவே உண்டு என்பதை உணர்ந்தவர்களாக, பேருக்கு வாழாமல், பெயருக்கேற்ற வாழ்வு வாழ தீர்மானிப்பதே இன்றைய தேவையாக உள்ளது.
இயேசுவின் உருமாற்ற அனுபவத்தைக் குறித்து இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். மலைக்குத் தன் சீடர்களோடு இயேசு சென்றார். அங்கு தம் தந்தையிடம் செபத்தில் ஒன்றித்திருந்தார். அப்போது அவர் தோற்றம் மாறினார். தந்தையாம் கடவுள் இயேசுவைக் குறித்து சாட்சியம் பகர்ந்தார். அந்த மலையில் இயேசுவோடு சீடர்கள் இருந்தாலும் இயேசு மட்டுமே உருமாறினார். தந்தையாம் கடவுளுக்கு உகந்த வாழ்வு இயேசுவிடம் மட்டுமே இருந்தது. எனவே மாட்சிக்குரிய தோற்றம் இயேசுவுக்கு மட்டுமே சாத்தியப்பட்டது. இயேசுவோடு மலையில் ஏறிய எல்லோரும் தந்தைக்குரியவர்களாக வாழ்ந்திட வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். ஆகவே தான் மீண்டும் மலையைவிட்டு கீழே இறங்கி வருகிறார். எப்படியும் எல்லோரையும் தம்மைப் போன்று கடவுளுக்கு உகந்தவர்களாய் உருவாக்கிட வேண்டும் என்பதே இயேசுவின் கனவாக இருந்தது. எப்படி தந்தைக்குரியவர்களாக வாழ்வது? இயேசுவுக்கு செவிசாய்த்து, அவரைப்போல வாழ்வது.
அன்று இயேசுவோடு மலைக்குச் சென்ற சீடர்கள், மாட்சிக்குரிய தோற்றத்தில் இயேசுவைப் பார்த்தார்கள், பரவசமடைந்தார்கள். அதையே நாமும் இன்று திருக்கோயில்களில் திருப்பலி நேரத்தில் பெற்று உளப்பூரிப்படைகின்றோம். ஆனால் அத்தோடு நின்றுவிடாமல், இத்தவக்காலத்தில் இயேசுவாகவே மாறிட அழைப்பு பெறுகிறோம். இயேசுவோடு செல்வதும், இயேசுவாக மாறுவதும் நம் வாழ்வில் நம்மையும் விண்ணகத்தந்தையின் பிள்ளைகளாக்கிடும். எனவே நாம் இயேசுவுக்கு செவிசாய்த்தவர்களாய் வாழ்ந்து, இயேசுவோடு செல்வோம்! இயேசுவாக மாறுவோம்!