இரக்கம் காட்டுவோம்! இறைவனைக் காட்டுவோம்!
லூக்கா 6:36-38
இன்றைய நற்செய்தி நம்மையும் தந்தையாம் இறைவனைப் போல தரணியில்; இரக்கமுடையவர்களாய் இருக்க அழைப்பு தருகிறது. ‘தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்’ (லேவி 19:2) என்கிற பழைய ஏற்பாட்டுக் கட்டளையை, ‘உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்’ (லூக் 6:36) என்று இயேசு புதிய ஏற்பாட்டில் மாற்றித் தருகிறார்.
இயேசு புனிதத்தை, இறைமையை, தூய்மையை இரக்கத்தோடு இணைத்துப் பார்க்கிறார். ஆகவே தான் பழைய ஏற்பாட்டில் தூயோராய் இருங்கள் என்று சொல்லப்பட்டதை, இயேசு இரக்கமுள்ளரோய் இருங்கள் என்று இன்னும் இயல்பு வாழக்கைக்கு ஏற்ற விதத்தில் தெளிவாய் கற்பிக்கிறார். இறைவன் காட்டும் இரக்கம் நம்மை வாழச் செய்வது போல, நாம் பிறர் மீது காட்டும் இரக்கம் அவர்களையும் வாழச் செய்யட்டும். அடுத்தவருக்கு இரக்கம் காட்டுகிறவர்கள் இரக்கத்தை மட்டுமல்ல, இறைவனையே காட்டுகிறார்கள் என்பதே உண்மை.
மானுட வரலாற்றில் மனித மனங்கள் எனும் தராசில் இரும்பாய் இறுகிப்போன இதயங்களல்ல, இலவம் பஞ்சாய் இளகி நின்ற இதயங்களே அதிக நிறை கொண்டிருந்தன. ஹிட்லரைப் போன்று இரக்கம் தொலைத்த அரக்கர்களாக அல்ல, இயேசுவைப் போன்று இரக்கம் வளர்க்கும் இனியவர்களாக வாழ்வதே வாழ்க்கைக்கு அழகு சேர்க்கும். ‘இறக்கத்தானே பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’ என்ற புனித அன்னை தெரசாவின் அமுத மொழிகள் நம் அன்றாட வாழ்வில் எதிரொலிக்கட்டும்.
வாழ்க்கையில் இரக்கம் எவரையும் எப்போதும் கீழே இறக்கிவிடுவதில்லை. மாறாக ஒருவரின் இரக்கம் அவரை இமயமளவு உயரே ஏற்றிவிடுகிறது என்பதே உண்மை. இரக்கம் சுரக்கும் இதயங்களாய் இனி நம் இதயங்கள் இருந்திடட்டும். இரக்கம் நிச்சயம் நம்மை சிறக்கச் செய்யும். ஆம், இரக்கம் சுரக்கும் இதயம் என்றுமே சிறக்கும். எனவே இனி அடுத்தவருக்கு இரக்கம் காட்டுவோம்! அதன் வழியாய் இறைவனைக் காட்டுவோம்!