தாழ்ச்சியில் தடம் பதிப்போம்! மாட்சியின் மகுடம் சூடுவோம்!
மத்தேயு 23:1-12
மகுடிக்கு மயங்காத பாம்பும் இல்லை. புகழுக்கு மயங்காத மனிதருமில்லை. இன்றைய கலாச்சாரம் புகழ் விரும்பும் கலாச்சாரமாக மாறி வருகிறது. பெருமைப்படுத்தப்பட வேண்டும், எங்கும் எதிலும் எப்போதும் முதலிடமும் முன்னுரிமையும் தரப்பட வேண்டும், பாராட்டு மழை பொழிய வேண்டும், கௌரவிக்கப்பட வேண்டும் என்கிற ஆசை அதிகரித்து வருகிறதைப் பார்க்க முடியும். உயர்ந்த இடத்தில் இருப்பதற்கே, உலகில் வாழும் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். மனிதர்கள் தங்களுடைய பெருமையையும், புகழையும் நிலைநாட்டுவதற்காக அதிகாரத் தளங்களைக் கட்டமைக்கிறார்கள். அவற்றின் வழியாக அடுத்தவரை அடிமைப்படுத்துகிறார்கள், ஆட்டிப்படைக்கிறார்கள்.
எஜமானன், முதலாளி, நிர்வாகி, அதிகாரி என்று அடுத்தவரை ஆட்டிப் படைக்கும் பணிகள் மட்டிலான தாகம் நம்மில் பலருக்கு உண்டு. ‘நான்கு பேருக்காவது நான் நாட்டாண்மையாக இருக்கணும்’, ‘என் பேச்சை கேட்க ஒரு கூட்டம் இருக்கணும்’ என்று அதிகாரத்தின் மீதான நம்முடைய ஆவல் தணியாத தாகமாய் தினமும் கூடுகிறது. ‘கல்யாண வீட்டில் நான்தான் மாப்பிள்ளையாக இருக்கணும்’, ‘சாவு வீட்டில் நான்தான் பிணமாக இருக்கணும்’ என்ற கவன ஈர்ப்பு மனநிலை உள்ளோர் நம்மில் நிறைய பேர். ஆக பாம்பாட்டி, குரங்காட்டி போல வாழவே நாம் ஆசைப்படுகிறோம் என்பது மட்டும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. ஆம், ஆட்டுவிப்பவர்களாய், அதிகாரம் செலுத்துகிறவர்களாய், வாழ்வதில் அவ்வளவு போதை நமக்கு.
ஆனால் இன்றைய நற்செய்தி தற்பெருமையைத் தவிர்க்கவும், தாழ்ச்சியில் தலைநிமிரவும் நம்மை அழைக்கிறது. இயேசுவின் காலத்தில் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் அதிகார போதை விரும்பிகளாகவும், புகழுக்கு அலைபவர்காளகவும், தற்பெருமையும் தலைக்கனமும் மிகுந்தவர்களாவும் இருந்ததைக் கண்டு, இயேசு அவர்களை மிகவும் வன்மையாகச் சாடுகிறார். ‘தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப் பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப் பெறுவர்’ என்று இயேசு தாழ்ச்சியின் மகத்துவம் குறித்து போதித்தார்.
தாழ்ச்சி வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் நம் வாழ்வைத் திறக்கிறது. ‘பெருமை மேலே ஏறிச் செல்வதில் அல்ல, கீழே இறங்குவதில்தான் இருக்கிறது’ என்பதன் உண்மை இனியாவது நமக்கு உரைக்கட்டும். ‘தாழ்ச்சியின் வழியே மாட்சி’ என்பது தவிர்க்க முடியாத கிறிஸ்தவ ஆன்மீகப் பாடம். மாட்சியை நோக்கிய பயணத்தில், தாழ்ச்சி எனும் புதிய பாதையை வகுத்து, அதில் தானும் நடந்து, தரணியர் அனைவரும் நடக்கக் கற்பித்தவர் இயேசு. சிகரத்தை எட்டிப்பிடிக்க ஒரு சின்ன வழி இருக்கும் என்றால் அது தாழ்ச்சி மட்டுமே. எனவே நாமும் தாழ்ச்சியில் தடம் பதிப்போம்! மாட்சியின் மகுடம் சூடுவோம்!