துன்பக் கிண்ணத்தில் துணிவோடு பருகுவோம்!
மத்தேயு 20:17-28
‘துன்பம் ஒரு தூசியே’. கண்டிப்பாக இது கண்ணை உருத்தும், கண்ணீரை வரவைக்கும், பாதையை மறைக்கும். ஆனால் தூசிக்கு பயந்து பார்க்க மறுப்பதும், பயணத்தைத் தவிர்ப்பதும் சரியாகுமா? தூசி விழுந்துவிட்டதெனச் சொல்லி கண்ணைப் பிடுங்கி எறிந்துவிடுபவர்கள் உண்டா? ஆகவே துன்பங்கள் தூக்க முடியாத தடித்த பாறைகள் இல்லை மாறாக துடைத்தெறியக்கூடிய தட்டையான தூசிகளே என்னும் புரிதல் உண்மையில் நம்மைப் பக்குவப்படுத்த உதவும்.
இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசு தன் பணி வாழ்வின் இறுதியில் தான் சந்திக்க இருக்கும் துன்பங்களையும் பாடுகளையும் குறித்து முன் அறிவிக்கிறார். தன் அரியணையின் வலமும் இடமும் இடம் வேண்டி நின்ற செபதேயுவின் மக்களான யாக்கோபுவுக்கும், யோவானுக்கும் அவர் கொடுத்த அழைப்பும், ‘என் துன்பக் கிண்ணத்தில் பருகுங்கள்’ என்பதாகவே இருக்கிறது. இனிக்கிறது என்பதற்காக இன்னும் கொஞ்சம் என்று கேட்டதும் இல்லை, கசக்கிறது என்பதற்காக காறித் துப்பியதும் இல்லை. இதுதான் இயேசுவின் இன்பங்கள் மற்றும் துன்பங்கள் மீதான பக்குவப்பட்ட பார்வையாக இருந்தது.
இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் நாம் பருகுவதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு, அதுவே அருமையான சீடத்துவ வாழ்வும் கூட. துன்பத்தை சந்திப்பதில் நமக்கு புதிய புரிதலை இயேசு கொடுக்கிறார். நம் பொருட்டு அல்லாமல், கடவுளுக்காகவும் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதருக்காகவும் துன்பத்தை சந்திக்கின்றபோது, அத்துன்பம் நமக்கு ஆசீர்வாதமாக அமைகிறது.
இயேசு பருகிய துன்பக் கிண்ணத்தின் கசப்பான துளிகளே இந்த மானுடத்தில் பரவிக்கிடக்கும் அலகையின் பாவ, சாப விடத்தை அறவே முறிக்கும் மாமருந்து. பணி வாழ்வும், பலி வாழ்வும் மட்டுமே இயேசுவின் கிண்ணத்திலிருந்து நாம் பருகுகிறோம் என்பதன் வெளிப்பாடு. இயேசுவைப் போல நாமும் பிறருக்கு பணி செய்வோம். இயேசுவைப் போல நாமும் பிறருக்காக பலியாவோம். இவ்வாறு நாமும் இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் இயேசுவைப் போல துணிவுடன் பருகுவோம்.