பார்க்க மறந்தவர்களைப் பாசத்துடன் பார்ப்போம்!
லூக்கா 16:19-31
‘பணம் பாதாளம் வரை பாயும்’ என்கிற கூற்றை இன்றைய நற்செய்தி சுக்குநூறாக உடைக்கிறது. யூதர்கள் செல்வத்தை கடவுளின் ஆசீர்வாதமாகப் பார்த்தார்கள். அதனால் செல்வந்தர்களை இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் ஏழைகளை இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் என்றும் யூதர்கள் கருதினர். ஆனால் எதார்த்தத்தில் செல்வம் நம்மை கடவுளிடமிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் தள்ளி நிற்கச் செய்கிறது. இயேசுவின் செல்வரும் ஏழை இலாசரும் என்கிற இந்த உவமை புதிய ஏற்பாட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்துகிறது. எல்லாம் கிடைத்த வாழ்க்கையை செல்வரும், எதுவுமே கிடைக்காத வாழ்க்கையை ஏழையும் வாழ்கிறார்கள்.
ஏழை எளியவர்கள் படைத்தவரை மட்டுமே நம்பி வாழ்வார்கள். பணக்காரர்களோ படைப்பு பொருட்களை மட்டுமே நம்பி வாழ்வார்கள். இயேசுவுக்கு ஏழை எளியவர்கள் மட்டில் சிறப்பு கரிசனை இருப்பதற்கான காரணம். அவர்கள் இறைப் பராமரிப்பில் மட்டுமே நம்பிக்கை கொண்டு வாழ்வதுதான். ஆனால் செல்வர்களோ தங்களுடைய பணம், செல்வம், சொத்து இவற்றின் மீது நம்பிக்கை கொண்டு இறைப்பராமரிப்பை இளக்காரமாய்ப் பார்க்கின்றார்கள், இறைப்பராமரிப்பை நம்பி வாழ்வோரையும் இளக்காரமாய்ப் பார்க்கின்றார்கள்.
செல்வனின் வீட்டு வாசலிலேயே ஏழை இலாசர் கிடந்தாலும் அவனைப் பார்க்க மறந்தவனாக, அவனுடைய துன்புறும் நிலையைப் பார்க்க மறந்தவனாக செல்வன் இருக்கிறான். செல்வன் அந்த ஏழை இலாசரை அடித்துத் துரத்தவில்லை, அவனுடைய உடைமைகளைக் கவரவில்லை. ஆனால் அவன் இலாசரின் இழிநிலையை கண்டுகொள்ளவே இல்லை என்பதே அந்த செல்வனிடம் இருந்த தவறு. வீட்டுக்குள் வசதியாய் வளமாய் வாழ்ந்தவன், தன் வீட்டு வாசலில் தவித்துக்கிடக்கும் ஏழையை ஒருபோதும் பாசத்துடன் பார்த்ததில்லை என்பதே அவன் தண்டிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது. ஆகவே நாமும் இந்த உவமையில் வரும் செல்வரைப் போல மறு உலகில் வேதனைப் படாமல் இருக்க செய்ய வேண்டியது: பார்க்க மறந்தவர்களைப் பாசத்துடன் பார்ப்பது.
திருத்தந்தை பிரான்சிஸ் சொல்கிறார்: ‘இன்றைய நவீன உலகின் பெரிய பாவம் பாராமுகம்’. நம் அருகில் இருப்போரின் அவலத்தை பார்த்தும் பார்க்காதபடி போவது, கண்டும் காணாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்றும், அது நரகத்தில் நம்மை தள்ளும் அளவுக்கு கொடியது என்றும் இயேசுவின் இந்த உவமை உணர்த்துகிறது. எனவே இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்மைப் பிடித்திருக்கின்ற பாராமுகப் போக்கை ஒழிப்போம். பார்க்க மறந்தவர்களையும், பார்க்க தவிர்த்தவர்களையும் இனி முதற்கொண்டு பாசத்துடன் பார்ப்போம்.