Friday, 5 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நல்லது நினைப்போம்! நல்லது நடக்கும்! 

மத்தேயு 21: 33-43, 45-46



‘தினை விதைத்தவன் தினையை அறுப்பான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான்.’ என்ற முதுமொழி  நமக்கு மிகவும் தெரிந்த ஒன்றே. எதை நாம் விதைக்கிறோமோ அதையே நாம் அறுப்போம் என்பது நமக்கு நன்கு புரிய வேண்டும். எள்ளை விதைத்துவிட்டு, கொள்ளு விளைய வேண்டும் என்று எண்ணுவதும், கொள்ளை விதைத்துவிட்டு, எள்ளு விளைய வேண்டும் என்று எண்ணுவதும் எவ்வளவு முட்டாள்தனமோ, அதே போலத்தான் தீயது நினைத்துவிட்டு நல்லது நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும். 

‘விதை ஒன்னு போட்டால் சுரை ஒன்னா முளைக்கும்?’ என்னும் பழமொழி நம் வாழ்வில் நாம் விதைத்தவற்றுக்கும், நாம் அறுப்பவற்றுக்கும் இடையேயுள்ள தொடர்பை தோலுரிக்கிறது. நல்லதை அறுக்க ஆசைப்படுபவன் நல்லதை அல்லவா விதைக்க வேண்டும்? அன்பை அறுவடை செய்ய ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன்பு அன்பை விதைத்திருக்க வேண்டாமா? இரக்கத்தை அறுவடை செய்ய ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன்பு இரக்கத்தை விதைத்திருக்க வேண்டாமா? 

‘நல்லது நினைத்தேன். ஆனால் நல்லது நடக்கவில்லையே’ என்கிற ஆதங்கம் நம்மில் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது. இதற்கான பதில்தான் இன்றைய நற்செய்தி. ஒரு நிலக்கிழார் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்காரர்களுக்கு கொடுத்துவிட்டு போகிறார். தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்றுவர பணியாட்களை அவர்களிடம் அனுப்பினார். அதைக் கொடுக்க மனமில்லாத குத்தகைக்காரர்கள் பணியாட்களை வதைத்தார்கள். கடைசியில் தம் மகனை அனுப்பினார். அவரையும் அவர்கள் கொன்றார்கள். எனவே  நிலக்கிழார் வரும்போது குத்தகைக்காரர்களை ஒழித்துவிட்டு, உரிய காலத்தில் தனக்குரிய பங்கைக் கொடுக்கும் வேறு பணியாளர்களுக்கு குத்தகைக்கு விடுவார். இதுவே இயேசு சொன்ன கொடிய குத்தகைக்காரர் உவமை. 

நிலக்கிழார் குத்தகைக்காரர்களுக்கு நல்லது நினைத்தார். ஆனால் குத்தகைக்காரர்கள் நிலக்கிழாருக்கு நல்லது நினைக்கவில்லை. நல்லது நினைத்த நிலக்கிழார் உவமையின் கடைசியில் நல்லதையே அறுவடை செய்தார், ஆம், தன் திராட்சைத் தோட்டத்தை மீட்டுக்கொண்டார். ஆனால் குத்தகைக்காரர்களோ நிலக்கிழாருக்கு தீயது நினைத்தார்கள். எனவே தீயதையே அறுவடை செய்தார்கள், ஆம் அழிந்துபோனார்கள். இறைவன் நமக்கு நல்லதே நினைக்கிறார், திராட்சைத் தோட்டத்தை தந்ததுபோல நன்மைகளால் நிரப்புகிறார். பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கேற்ப நாமும் நல்லது நினைக்கும் நன்மனம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதே இறைவனது விருப்பம். எனவே பெற்றுக்கொண்ட நன்மைகளை மறந்துவிட்டு, அக்கொடிய குத்தகைக்காரர்களைப்போல நல்லது நினைத்தவருக்கே தீயது நினையாமல் இருப்போம். நல்லது நினைப்போம்! நல்லது நடக்கும்!