வீட்டுக்குள் போகும் விருப்பம் வளர்ப்போம்!
லூக்கா 15: 1-3, 11-32
வீடு என்பது வெறும் கற்களாலும் மண்ணாலும் கட்டப்பட்ட கட்டம் இல்லை. அது உறவுகள் மனம் ஒன்றித்து மகிழ்ந்து வாழும் இடம். ஆனால் இன்று பெரும்பாலான வீடுகளில் உறவுகள் வளர்வதில்லை. மாறாக தேய்ந்து வருவதையே பார்க்கிறோம். வீட்டுக்குப் போகும் விருப்பமே சிலருக்கு வருவதில்லை. வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது சிலருக்கு வெறுப்பையும், சலிப்பையும் தருகிறது.
உறவுகளைப் போற்றும் உளப்பாங்கு உருப்பெற வேண்டிய வீடுகளில், இன்று உறவுகளை உடைத்தெறியும் நிலை பெருகி வருவது நாம் அறிந்ததே. உறவுகளின் தொட்டிலாய் இருக்க வேண்டிய வீடுகள், இன்று உறவுகளைப் புதைக்கும் சமாதிகளாய் இருக்கும் அவலத்தை என்ன சொல்வது? அடுத்தவரின் நிறைகளையும் குறைகளையும் அனுசரித்து, அரவணைத்து போவதும், தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பதும், தடுக்கி விழும்போதும் தூக்கிவிடுவதும், தவறு செய்யும்போது திருத்துவதும், திருந்தி வரும்போது ஏற்றுக்கொள்வதும் தான் நம்முடைய வீடு நமக்குக் கொடுக்கும் உறவு அனுபவம்.
இன்றைய நற்செய்தியில் வழங்கப்பட்டுள்ள காணாமற்போன மகன் உவமையானது வீட்டைச் சுற்றியே அமைந்திருக்கிறது. ஒரு வீட்டில் ஒரு தந்தை. அவருக்கு இரு மகன்கள். இளையவன் சொத்தைப் பிரித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறான். மூத்தவன் தந்தையோடு வீட்டில் இருக்கிறான். வீட்டைவிட்டு போனபிறகு தனது சொத்தை இழக்கிறான் இளையவன். வீட்டு நினைப்பு வருகிறது. வீட்டில் தனக்கு இருந்த வளமான வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான். மீண்டும் வீட்டுக்கு வருகிறான். நொறுங்கிப்போய், உடைந்துபோய், சோர்ந்து, களைத்து, வெறுத்து, விரக்தியிலும் வேதனையிலும் வீடு திரும்புகிறான். தந்தை வீட்டுக்கு வெளியேயே அவனுக்காக காத்திருந்தார். ஓடிப்போய் வீட்டுக்குள் அவனை அழைத்து வருகிறார். தோட்டத்திற்கு போயிருந்த மூத்தவனும் வீடு திரும்புகிறான். இளையவன் வந்திருப்பதை கேள்விப்படுகிறான். வீட்டுக்குள் போக விருப்பமில்லாமல் வெளியேயே நின்றுவிட்டான். மீண்டும் தந்தைவந்து அவனையும் வீட்டுக்குள் வரும்படி அழைத்தார். இல்லை, கெஞ்சிகேட்டார். மூத்தவன் வீட்டுக்குள் சென்றானா? பதிலின்றி உவமை முடிந்தது.
வீட்டில் இருக்கும் வரை வீடு கொடுக்கும் பாசம், பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற உறவின் உன்னத பரிமாணங்கள் பல நேரங்களில் நமக்குப் புரிவதில்லை. வீட்டைவிட்டு வெளியே தனித்து, தவித்து நிற்கும்போதுதான் வீட்டின் அருமை நமக்குப் புரிகிறது. நம் தந்தையாம் கடவுளின் வீடாகிய விண்ணகத்தை விட்டு பாவத்தால் வெளியேறிவன் மனிதன். மீண்டும் தன் வீடாகிய விண்ணகத்திற்குள் மனிதன் வருவான் என கடவுள் காத்திருக்கிறார். இளையவனும் மூத்தவனும் தன்னோடு வீட்டுக்குள் இருப்பதே இறைத்தந்தையின் விருப்பம். எனவே இளையவனைப் போல வீதியிலும், மூத்தவனைப் போல வாசலிலும் நின்றுகொண்டிருக்காமல், வீட்டுக்குள் போகும் விருப்பம் வளர்ப்போம்!