நாமே ஆண்டவரின் ஆலயங்களாவோம்!
யோவான் 15: 13-21
ஆலயம்: ஆ - ஆன்மா, லயம் - லயித்தல். ஆக, ஆலயம் என்பது ஆன்மா இறைவனிடம் லயிக்கும் இடம். எனவே தான் நம் ஆன்மா இறைவன் பால் லயிக்க ஆலய வழிபாடு உதவுகிறது என்பதனால் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று தமிழுலகம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு ஆலயம் அல்லது கோயில் என்பது எல்லா சமயத்திலும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது. அதைக் குறித்தே ‘கோயில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார் ஒளவை மூதாட்டி. அந்த அளவிற்கு ஓர் ஊருக்கு கோயில் என்பது முதன்மையாக, மையமாக போற்றப்பட்டுள்ளது.
யூத சமயத்திலும் ஆலயம் என்பது அவர்களுடைய பெருமைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஆனால் விவிலியத்தில் பார்க்கும் போது தொடக்க காலங்களில் ஆலயம் என்பதே யூத சமயத்தில் இல்லை. இஸ்ரயேல் மக்களுடைய விடுதலைப் பயணத்தின்போது இறைப்பிரசன்னத்தின் வெளிப்பாடாக இருந்த உடன்படிக்கைப் பேழையினை மக்கள் தங்கியிருந்த பாளையத்திற்கு வெளியே சந்திப்புக்கூடாரம் என ஒன்றை நிறுவி அதிலே வைத்திருந்தார்கள். கடவுளின் பிரசன்னத்தை தங்களிடமிருந்து தள்ளிவைத்துப் பார்த்தார்கள். காரணம் இறைவனின் பரிசுத்த பிரசன்னம் பாவிகளாகிய தங்களுடைய இடத்திலிருந்து அகன்று, அப்பால் இருந்திட வேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணம். ஆனால் சாலமோன் மாhமன்னன் யாவே இறைவனுக்கென்று முதன்முதலாக விவிலியத்தில் ஆலயம் ஒன்றை எருசலேம் நகரிலே கட்டியெழுப்பினான். இதுவரை தள்ளி வைத்துப் பார்த்த கடவுளின் பிரசன்னத்தை, அவர்கள் இப்போது தங்கள் மத்தியிலே வைத்துப் பார்த்தார்கள்.
கடவுள் தங்களோடு உடனிருக்கிறார். தங்கள் பக்கத்திலேயே இருக்கிறார். இதுவரை அப்பால் இருந்த கடவுள் இப்போது அருகிலேயே இருக்கிறார். தங்கள் வாழ்விடத்திலே அவர் தங்களோடு தங்கியிருக்கிறார். தாங்கள் வாழும் சூழலை அவர் அறிந்திருக்கிறார். அவருடைய பரிசுத்தம் தங்கள் பாவங்களைப் போக்கி, தங்களையும் பரிசுத்தமாக்குகிறது என்கிற நம்பிக்கை வளர்ச்சியை ஆலயத்தின் வழியாக யூதர்கள் பெற்றுக்கொண்டார்கள். ஆலய வருகையும், வழிபாடும் யூதர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
அந்த ஆலய அனுபவம் இயேசுவைப் பொறுத்த மட்டில் அருள் வாழ்வில் அடுத்த கட்ட நகர்வுக்கு நம்மை அழைத்துப்போக வேண்டும். ஆண்டவரின் இல்லத்தின் மீது ஆர்வம் கொள்வது இயேசுவைப் போல எல்லாருக்கும் தேவையான ஒன்று. ஆம், இயேசு தன்னையே கடவுளின் ஆலயம் என்றும் ஆண்டவரின் இல்லம் என்றும் குறிப்பிட்டுப் பேசுகிறார். நம்முடைய ஆலய அனுபவங்கள் எல்லாம் நமக்குள் இறைப்பிரசன்னத்தை உணரச் செய்யவும், அதன் விளைவாக நாமே ஆண்டவருக்கான ஆலயங்களாக உருவாகிட உதவிடவும் வேண்டும் என்பதை மனதில் கொண்டு, ஆலய அனுபவங்களை வளப்படுத்துவோம். அதனால் நாமே ஆண்டவரின் ஆலயங்களாவோம்!