Monday, 8 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நல்லவர்களைத் தாங்கிப் பிடிப்போம்!

லூக்கா 4:24-30



இந்த உலகம் சற்று விசித்திரமானது. இங்கு நல்லவர்கள் பரிகசிக்கப்படுவார்கள். கெட்டவர்கள் பரிசளிக்கப்படுவார்கள். நல்லவர்கள்  எதிர்க்கப்படுவார்கள். கெட்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். நல்லவர்கள்  வெறுக்கப்படுவார்கள். கெட்டவர்கள் விரும்பப்படுவார்கள். நல்லவர்களை திண்டாடச்செய்வார்கள். கெட்டவர்களை கொண்டாடி மகிழ்வார்கள். இப்படி தலைகீழ் முரணாய் தவிக்கும் வாழ்க்கையே நமதாகிவிட்டது. 

நாம் நல்லது நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் நாம் நல்லவர்கள் பக்கம் நிற்பதில்லை. நாம் தீயது களையப்பட வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் நாம் தீயவர்களை எதிர்த்து நிற்பதில்லை. இப்படி நம்முடைய முரண்பட்ட வாழ்வுமுறையால், உலகில் தீமை தலை நிமிர்வதற்கும், நன்மை தலை குனிவதற்கும் தினமும் நாமும் காரணமாகிறோம். நல்லவர்கள் எதிர்ப்பு என்பதை வெளிப்படையாக நாம் நடத்துவதில்லை. ஆனால் நல்லவர்களைப் புறக்கணிப்பதன் வழியாக நல்லவர்கள் எதிர்ப்பு என்பதை நாள்தோறும் இம்மண்ணில் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.  

இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சொந்த ஊராகிய நாசரேத்திற்கு வருகிறார். ஆனால் அங்கு அவருடைய பணிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இயேசு ஏமாற்றத்தை மட்டுமே நாசரேத்தில் அனுபவித்தார்.  சொந்த மண்ணின் மக்கள்கூட இயேசுவின் இறையாட்சிப் பணியைப் புரிந்துகொள்ளவும் இல்லை. அப்பணிக்கு ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. புறக்கணிப்பே பல நேரங்களில் இயேசுவின் பணிக்கு கிடைத்த பரிசு. அவமானமே இயேசுவுக்கு அடிக்கடி கிடைத்த வெகுமதி. சிவப்புக் கம்பள வரவேற்பையும், ஆளுயர மாலையையும் விரும்பும் அயோக்கியர்கள் மத்தியில், நல்லவர்கள் நசுக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் நாளும் நடக்கிற செயலே ஆகும். இறைவாக்கினர்களுக்கும் அப்படியே நடந்தது. இயேசுவுக்கும் அப்படியே நடந்தது. இயேசுவின் சீடர்களுக்கும் அப்படியே நடந்தது. 

தீமையை ஆதரிக்கிறோம் என்பதால் அல்ல, நன்மையை ஆதரிக்கவில்லை என்பதால் நாம் தீமைக்கு துணை போகிறோம். பொய்மைக்கு பரிவட்டம் கட்டுகிறோம் என்பதால் அல்ல, உண்மைக்கு பாடை கட்டுவதால் நாம் பொய்மையை வெற்றி பெறச் செய்கிறோம். தீமையின் பக்கம் நிற்பவர்களைவிட உண்மையின் பக்கம் நிற்க மனமில்லாதவர்களால் தீமை ஜெயிக்கிறது. நன்மையின் பக்கம் நிற்க மனமில்லாதவர்கள், நல்லவர்கள் நசுக்கப்படும்போது வேடிக்கை பார்க்கிறவர்கள், உத்தமர்கள் உதாசீனப்படுத்தப்படும்போது உம்மென்று இருப்பவர்கள் ஆகிய எல்லோருமே நாசரேத்தில் இயேசுவைப் புறக்கணித்த போலியான சொந்தங்களே. ஏற்றுக்கொள்ளப்படாமல் வீதியில் விரட்டப்படும் இயேசுக்களாய் இன்று ஏராளமான நல்லோர் நம்மிடையே உண்டு. எனவே நல்லோரைப் புறக்கணிப்பது இயேசுவையே புறக்கணிப்பபதாகும். நல்லோரைத் தாங்கிப் பிடிப்பது இயேசுவையே தாங்கிப்பிடிப்பபதாகும். ஆகவே, இனி நல்லவர்களைத் தாங்கிப் பிடிப்போம்!