Tuesday, 9 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 மன்னிப்பு என்னும் மாதவம் செய்வோம்!

மத்தேயு 18:21-35



உலகத்தில் மிகவும் அபூர்வமாக பூக்கும் ‘பூ’ மன்னிப்பு. மன்னிப்பு மட்டும் இம் மண்ணுலகம் எங்கும் பூத்துக் குலுங்கினால் இவ்வுலகம் எவ்வளவு அழகாக இருக்கும்? நம் மனங்கள் நந்தவனமாய் இருக்க நினைப்பதைவிட மயான பூமியாய் இருக்கவே அதிகம் ஆசைப்படுகின்றன. மன்னிப்பு இங்கு மனங்களில் அரும்புவதும் இல்லை, மலர்வதும் இல்லை. கடவுளின் மன்னிப்பு நம் மனங்களில் விதையாய் விழுகின்றது. ஆனால் அதை பிறர் மன்னிப்பாய் வளர்த்தெடுக்கவும், பூக்கச் செய்யவும் நமக்கு இன்னும் கடினமாக இருக்கிறது. இந்த மன்னிப்பு மலர்ந்திட நமது மனம் மிக ஆழமாய் உழப்பட வேண்டியிருக்கிறது, உரமிடப்பட வேண்டியிருக்கிறது. 

இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமையில் வரும் கெட்ட பணியாள் இரண்டு நல்ல பாடங்களை நமக்கு கற்றுத் தருகிறார். முதலாவதாக, மன்னிப்பு கேள் என்பதை அவன் செய்ததிலிருந்து கற்கிறோம். இரண்டாவதாக, மன்னிப்பு கொடு என்பதை அவன் செய்யத் தவறியதிலிருந்து கற்கிறோம். கடவுள் நம்மை மன்னிப்பது பிறரை நாம் மன்னிப்பதற்கு அடிப்படையாக அமைகிறது. மன்னிக்கப்பட்டவன் பிறரை மன்னிக்க வேண்டும். மன்னிப்பு ஒரு தொடர் நிகழ்வு. அது ஒரு தொடர் சங்கிலி.

தலைவர் முதல் பணியாளருக்கு கொடுத்தது தாராள மன்னிப்பு. அவர் அவனது கடன் செலுத்தும் காலத்தை நீட்டிக்கவில்லை. கடன் தொகையை  குறைக்கவில்லை. மாறாக கடன் முழுவதும் அப்பணியாளருக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மன்னிப்பு என்பது எதில் அடங்கியிருக்கிறது என்றால் நமக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் அதை தாங்குவதில் இருக்கிறது. முதல் பணியாள் தலைவருக்கு திருப்பி செலுத்திட வேண்டிய கடன் தொகை மிகப் பெரியது. அதை அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் திருப்பிச் செலுத்த முடியாத தொகையாக இருக்கிறது. இரண்டாம் பணியாளரின் கடன் தொகை சற்று குறைவான ஒன்று. அது திருப்பி செலுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் மன்னிப்பு பெற்றுக் கொண்ட அந்த முதல் பணியாள் தன்னுடைய சக பணியாளருக்கு மன்னிப்பை மறுக்கிறான். 

மன்னிப்பு என்பது தீர்ப்பிடும் உரிமையை கடவுளுக்கு கொடுத்துவிடுவது. மன்னிப்பு மறுக்கப்படும் போது மனிதம் மரிக்கிறது. நாம் மன்னிக்க வேண்டும். ஏனென்றால் நமக்கும் மன்னிப்பு தேவையாக இருக்கிறது. மன்னிக்க மறுத்தால் மீளாத் துயர் உண்டு என்பதை அந்த முதல் பணியாளுக்கு நிகழ்ந்த முடிவிலிருந்து அறிகிறோம். மன்னித்தால் மட்டுமே மன்னிப்பு. இத்தவக்காலத்தில் நம் மனதை ஆழ உழுவோம். இறைவன் நமக்குத் தரும் மன்னிப்பை விதையாக்கி, பிறருக்கு நாம் தரும் மன்னிப்பை பூவாக்கி, அதையே கடவுளுக்கு உகந்த காணிக்கையாக்குவோம். எனவே மனிதம் மகிழ்ந்திட, நம்முடைய மனங்களில் பூத்து, பிறர் வாழ்வில் மணம் பரப்பிட வேண்டிது மன்னிப்பு என்பதை உணர்வோம். மன்னிப்பு என்னும் மாதவம் செய்வோம்!