Wednesday, 10 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் கற்றுக்கொடுப்போம்!

மத்தேயு 5:17-19



உலகில் பாடசாலைகள் கூடிவிட்டன. படித்தவர்களும் எண்ணிக்கையில் பெருகிவிட்டோம். ஆனால் வாழ்க்கைக்கான அடிப்படைப் பாடங்களை எல்லாம் நாம் படித்துவிட்டோமா என்றால் அது மிகப் பெரும் கேள்வியே. அதே போல படித்தவற்றின்படி வாழுகிறோமா என்பதும் இங்கு பெரும் விவாதமே. நம்மில் பலருக்கும் அடுத்தவருக்கு கற்றுக்கொடுக்க ஆசை. ஆனால் அதையே கடைபிடிக்கவோ தயக்கம். உலகில் போதித்தவவர்கள் அல்ல சாதித்தவர்களே பிறருக்கு பாடமாய் இருக்கிறார்கள். 

அடுத்தவருக்கு அறிவுரையையும் ஆலோசனையையும் இலவசமாய் கொடுக்கும் மனிதர்களுக்கு உலகில் பஞ்சமில்லை. சொல்லால் கற்றுக்கொடுப்பவர்களை அல்ல, செயலால் கற்றுக்கொடுப்பவர்களையே வரலாறு தன் நினைவில் வைத்துக்கொள்ளும். வாய்ச்சொல் வீரர்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவமாட்டார்கள். நல்ல தலைவர்கள் வாய்ச்சொல் வீரர்களாக அல்ல, செயல் வீரர்களாகவே இருப்பார்கள். பாதையைக் காட்டுபவன் மட்டும் நல்ல தலைவன் இல்லை. அந்தப் பாதையில் நடப்பவனே உண்மையான தலைவன். இன்றைய சமுதாயம் அப்படிப்பட்ட தலைவர்களையே தேடுகிறது.

இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவார்த்தையைக் கடைபிடித்து கற்;றுத்தர வேண்டும். அப்படி செய்கிறவர்களே விண்ணரசில் பெரியவராயிருப்பர் என்று குறிப்பிடுகிறார். இயேசுவின் காலத்தில் இருந்த சமய குருக்கள், போதகர்கள், பரிசேயர், மறைநூல் அறிஞர்கள் போன்றவர்கள் திருச்சட்டத்தை மக்களுக்கு கற்பித்தனர். அதில் அவர்கள் குறை வைக்கவில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் போதித்தவற்றில் பாதியாவது கடைபிடித்தார்களா என்றால், அதற்கு இல்லை என்பதே மறுப்பிற்கில்லாத உண்மைப் பதிலாகும். 

யூத சமயத் தலைவர்களுக்கு இயேசுவின் போதனையும் வாழ்வும் சவாலாகவே இருந்தது. ஏனென்றால் அவரிடம் வார்த்தை ஒன்றும், வாழ்க்கை வேறொன்றுமாக எந்தச் சூழலில் இருந்ததில்லை. இயேசு போதித்ததையையே வாழ்ந்தார், வாழ்ந்ததையே போதித்தார். அவரிடம் பிளவு இல்லை. அவர் சொல்லும் செயலும் இணைந்தே சென்றன. ‘ஊருக்குத் தான் உபதேசம்’ என்கிற நிலையில் வாழ விரும்பும் மனிதர்களுக்கு இயேசுவின் இன்றைய நற்செய்தி உண்மையில் ஒரு பிரம்படிதான். கண்ணை மூடி போதிப்பதைவிட கண்ணைத் திறந்து வாழ்ந்துகாட்டுவது உத்தமம். 

பிறருக்கு ஒன்றைச் சொல்லும் முன்னதாக, அதை முதலில் நமக்கே நாம் சொல்லிக் கொள்வோம். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவோம். நல் வார்த்தைகளைவிட நல் வாழ்க்கையே உலகம் அதிகம் விரும்புகிறது. சொல்லைவிட செயலே இங்கு தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தும். அதுவே எல்லா மாற்றத்திற்கும் வழி வகுக்கும். எனவே இயேசுவைப் போன்று, நாமும் வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் கற்றுக்கொடுப்போம்!