கடவுளோடு கரம் கோர்ப்போம்!
கடவுளின் அரசைக் கட்டியெழுப்புவோம்!
லூக்கா 11:14-23
‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்பான் பாரதி. இன்றைய உலகின் போக்கை உற்றுப் பார்த்தால், இங்கே பிணம் தின்னும் சாத்திரங்கள் பெருகிப் போனது கண்கூடு. மண்ணில் வாழ்வுக் கலாச்சாரம் மறைந்து அழிவுக் கலாச்சாரம் தலை தூக்கத் தொடங்கிவிட்டது. அலகையும் அலகையின் சக்திகளும் உலகினை ஆட்சி செய்வதால், வாழ்வு வாடுவதும், அழிவு அரும்புவதும் தெளிவாய்த் தென்படுகிறது. ஆண்டவரின் ஆட்சி அஸ்தமித்து, அலகையின் ஆட்சி உலகை அலைக்கழிக்கிறதோ என்கிற பயம் நமக்கு பல நேரங்களில் ஏற்படத்தான் செய்கிறது.
‘அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி’ என்னும் கூற்றை நாம் அறிவோம். நம்மை ஆள யாரை நாம் அனுமதிக்கிறோமோ, அதைப் பொறுத்தே நம்முடைய வாழ்வும் அமையப் பெறுகிறது. நன்மையின் ஊற்றாம் கடவுள் நம்மை ஆள அனுமதித்தால், நம்முடைய வாழ்வு நன்மைகளால் நிறைவு பெறும். தீமையின் சின்னமாம் பேயும், பேயின் சக்திகளும் நம்மை ஆள அனுமதித்தால், நம்முடைய வாழ்வு தீமைகளின் கூடாரமாகவே மாறிப்போகும்.
பழைய ஆதாம் தீமைக்கு துணைபோனான். ஆனால் புதிய ஆதாமாகிய இயேசுவோ நன்மைக்கு துணைபோனார். தீமையை உயர்த்திப் பிடித்தவன் பழைய ஆதாம். நன்மையை உயர்த்திப் பிடித்தவர் புதிய ஆதாமாகிய இயேசு. நன்மையைக் கொன்று புதைத்து, தீமையையும் தீமையின் ஆதிக்கத்தையும் உலகில் கிளைவிட்டு பரப்பி நிற்கும் அலகையின் அட்டகாசத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் இன்றைய நற்செய்தியில் இயேசு முறியடிக்கிறார். பேய் பிடித்த மனிதரின் நலமான, வளமான வாழ்வுக்குத் தடையாக இருந்த அப்பேயை அவரிடமிருந்து விரட்டுகிறார். பேயின் ஆட்சிக்கு முடிவுரை எழுதுகிறார்.
இறைவனின் அரசு எல்லோருக்கும் நலமும், வளமும் சேர்க்கும் அரசு. அந்த இறைவனின் அரசை இம்மண்ணில் கட்டமைப்பதே இயேசுவின் கனவு. அதற்காகவே அவர் அலகையோடும் அலகையின் சக்திகளோடும் போராடினார். இருளின் ஆட்சிக்கு இறுதி அத்தியாயம் எழுதிட இன்னுயிரையும் ஈந்தார். காரிருளை விரட்ட தன்னையே பேரொளி வீசும் பெருஞ்சுடர் ஆக்கினார். தன் எல்லாச் செயல்பாடுகளாலும் இறையாட்சியை இம்மண்ணின் மக்களுக்கு எடுத்துக்காட்டினார்.
கடவுளின் அரசைக் கட்டமைப்பதிலும், கட்டிக்காப்பதிலும் உலக மாந்தர் அனைவரும் தன்னோடு உடனிருக்க வேண்டும் என்பதே இயேசுவின் ஆசை. தன்னோடு இணைந்து அலகையின் சக்திகளோடு போராடவும், தீமையை துரத்தி, நன்மையை வளர்த்தெடுக்கவும் இயேசு தமது இறையாட்சிப் பணிக்கு பங்காளிகளாய் நம்மையும் எதிர்பார்க்கிறார். கடவுளின் அரசைக் கட்டியெழுப்ப, தீமையை தகர்க்க, நன்மையை நிலைநாட்ட நாமும் இயேசுவோடு இணைந்து உழைப்போம். கடவுளோடு கரம் கோர்ப்போம்! கடவுளின் அரசைக் கட்டியெழுப்புவோம்!