Friday, 12 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 இதய அன்பால் இறையாட்சிக்கு அருகில் செல்வோம்!


மாற்கு 12: 28-34




‘அன்பு ஒன்றுதான் அனாதை’. அவ்வப்போது இவ்வுலகின் மனிதர்கள் உதிர்க்கும் வருத்தம் தோய்ந்த வார்த்தைகள் இவை. ஆனால் இதில் உண்மைத் தன்மை உள்ளதா? நிச்சயம் இல்லை. ஏனென்றால் அன்பு எப்போதும் அனாதை ஆவதில்லை. இவ்வுலகில் இறைவனும் இறைவனின் சாயலாய் படைக்கப்பட்ட கடைசி மனிதனும் இருக்கும்வரை எவரும் எப்போதும் அனாதை இல்லை.   

இன்று பொருட்களை அன்பு செய்து, மனிதர்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட சீர் கெட்ட தலைமுறையில் நாம் சிக்கித் தவிக்கிறோம். மனிதர்களின் மனம் சக மனிதர்களையும், கடவுளையும் நேசிப்பதைவிட, பொருட்களையே பெரிதும் நேசிக்கும் அவலம் அவனியை ஆட்டிப்படைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த அவலம் இறைவனையும், இறைவனின் சாயலான மனிதர்களையும் நம் வாழ்விலிருந்து அப்புறப்படுத்திவிட்டது.

இச்சூழலில் அன்பை நம்முடைய வாழ்வின் அச்சாணியாகவும், ஆணிவேராகவும் எடுத்துக்காட்டிட இயேசு விரும்புகிறார். பழைய ஏற்பாட்டில் மொத்தம் 613 கட்டளைகள் உண்டு. அவற்றில் செய்யக் கூடாதவை என்று சொல்கிற கட்டளைகள் 365. செய்ய வேண்டியவை என்று சொல்கிற கட்டளைகள் 248. அத்தனை கட்டளைகளிலும் அன்பே முதன்மையானது. அந்த அன்பு ஆண்டவருக்கும் அடுத்தவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று இயேசு வலியுறுத்துகிறார்.   

கடவுளை அன்பு செய்ய வேண்டும். அதற்கு இணையாக மனிதரையும் அன்பு செய்ய வேண்டும். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணையான இரு கட்டளைகள் என்றே இயேசு சொல்கிறார். இறை அன்பும், பிறர் அன்பும் எரி பலிகளையும், வேறு பலிகளையும் விட சிறந்தது என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. புனித பவுலின் வார்த்தைகளில் சொல்கிறபோது, ‘என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை’. ‘அன்பே உங்கள் பலமும் பலவீனமுமாக இருக்கட்டும்’ என்று சொல்கிறார் புனித அன்னை தெரசா. எனவே நம் வாழ்வில் அன்பே நம்முடைய அடையாளமாகட்டும். செய்யும் அனைத்திலும் அன்பைக் கலந்துகொடுப்போம். அன்பெனும் அமிழ்தால் ஆனந்த உலகு படைப்போம்.

'செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை, அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு’’ என்று பாரதி பாடுகிறார். அன்பே தவம் என்றும், அத்தவத்தைச் செய்தால் நமது வாழ்வில் இன்பம் பெறலாம் என்றும் பாரதி கூறுகிறார். இன்பங்களில் எல்லாம் பேரின்பம் பரம்பொருளின் பக்கத்தில் நாம் இருப்பதும், அவரது ஆட்சியில் இணைவதுமே. எனவே அன்பே நமது தவமாகட்டும்!  இதய அன்பால் இறையாட்சிக்கு அருகில் செல்வோம்!