நாம் இருப்பதுபோல நம்மை நாமே ஏற்றுக்கொள்வோம்!
லூக்கா 18:9-14
வாழ்க்கையில் நிம்மதி வற்றிப்போவதற்கும், மகிழ்ச்சி மங்கிப் போவதற்கும் அடுத்தவருடன் நாம் ஓயாமல் செய்யும் ஒப்பீடு ஒன்றே காரணம். மனித வாழ்வு தனித்துவமானது என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கும்போதும், அடுத்தவரைப் போலச் செய்தல் என்னும் வறட்டுப் பிடிவாதம் வந்துவிட்டபிறகும், வாழ்வு சுகமாக இருப்பதே இல்லை. அடுத்தவருடனான அனாவசியமான ஒப்பீடு நம் தனித்துவத்தை கொலை செய்கிறது. இறைவன் நமக்குக் கொடுத்த வாழ்வை இன்னொன்றிற்கு அடகு வைக்கிறது. ஒப்பீடு நம்மை நாமாக வாழவிடாது. நம்மை பிரதிகளாகவும், நகல்களாகவும், போலிகளாகவும் மாற்றிவிடும். நம் சுயம் செத்துப்போகும். நம் உண்மைத் தன்மை உருவிழந்துபோகும்.
கொலைகளும், தற்கொலைகளும் அதிகரிப்பதன் காரணம் யாதென்றால் ஏற்றுக்கொள்ளப்படாமையே. மனிதன் தன்னைத் தானே ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும்போது, அவன் தன்னையே அழித்துக் கொள்கிறான். தன்னை பிறர் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, மனிதன் பிறரை அழிக்கிறான். ஏற்றுக்கொள்ளப்படுதலை தடைசெய்யும் செயல்பாடுகளுள் மிக முக்கியமானது ஒப்பீடு செய்தல். எதிர்மறையான ஒப்பீடும், அது ஏற்படுத்தும் தாக்கமும் மனித வாழ்வை வறண்ட பாலைநிலமாய் மாற்றிவிடுகிறது.
இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையைக் குறிப்பிடுகிறார். பரிசேயர் தன் வாழ்வை வரிதண்டுபவரோடு ஒப்பிட்டு, அவனைவிட தன்னை உயர்த்தி காட்டுகிறான். தனது செபத்தை தன் புகழ்பாடும் ஒன்றாக மாற்றுகிறான். பரிசேயர் செய்த பிறருடனான ஒப்பீடு அவனைத் தற்பெருமையும், தலைக்கனமும் மிகுந்தவனாக மாற்றியது. அடுத்தவரை மனித மாண்புடன் நடத்தும் அடிப்படை வாழ்வு நெறியைக் கூட அவனிடமிருந்து இல்லாமல்போகச் செய்தது. அடுத்தவரை தாழ்த்தி தன்னை உயர்த்தும் வக்கிரமான மனம் பரிசேயர் செய்த ஒப்பீட்டால் வந்தது. தனது வாழ்வின் தனித்துவமும், சிறப்பும் அந்த வாழ்வைக் கொடுத்த கடவுளைப் புகழவும், பிறரது வாழ்வில் உதவவும் தனக்கு துணை செய்ய வேண்டும் என்னும் விசாலமான உள்ளம் இல்லாத பரிசேயர் கடவுளுக்கு ஏற்புடையவராகவில்லை என்பது இந்த உவமை நமக்குச் சொல்லும் செய்தி.
அதே சமயத்தில் வரிதண்டுபவர் தன் வாழ்வின் எதார்தத்தை உணர்ந்தவராய், தன் உண்மையான தன்மையையும் இயல்பையும் ஏற்றுக்கொள்கிறார். அதே சமயத்தில் அந்த நிலைக்காக கடவுளையோ, பிறரையோ குறைகூறவும் இல்லை. தன் உடைந்த உள்ளத்தை, நைந்த நெஞ்சத்தை கடவுளுக்கு முன் காணிக்கையாக்குகிறார். ஒப்பீட்டை ஓரம் கட்டிவிட்டு, கடவுள் முன் தனது உண்மைத் தன்மையை படைக்கிறார். பாவி என்று தன் பலவீனத்தை புரிந்துகொண்ட பக்குவப்பட்ட மனிதராய் செபிக்கிறார். தன்னை ஏற்றுக்கொண்டவராய் கடவுள் முன் நின்றார். அதனால் கடவுளுக்கு அவர் ஏற்புடையவராகி வீடு திரும்பினார். நாம் இருப்பதுபோல நம்மை நாமே ஏற்றுக்கொள்வோம்!