ஒளியின் பக்கம் ஓடி வருவோம்!
யோவான் 3:14-21
ஒளியே முதல் ஆற்றலும், முக்கிய ஆற்றலும் ஆகும் என்கிறது அறிவியல். கடவுளின் படைப்பில் முதல் படைப்பும் ஒளியே என்கிறது விவிலியம். ஒளி இல்லையேல் உலகில் எதுவுமே இருக்கவும் முடியாது, இயங்கவும் முடியாது. ஒளியிடத்தில் பாதுகாப்பு உண்டு. ஒளியால் வளர்ச்சி உண்டு. ஒளியிடம் வாழ்வு உண்டு. ஒளிதான் நமக்கு அடையாளம் தரும். ஒளிக்கு எதிர் இருள். இருள் என்பது ஒளி இல்லாத நிலை. இருள் இருக்குமிடத்தில் தளர்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்படும். இருளிடத்தில் பாதுகாப்புக்கு வழியில்லை. இருள் இருக்குமிடத்தில் ஆபத்துகளும் அச்சுறுத்தல்களும் ஏற்படும். ஒளி நம் அடையாளத்தை மறைக்கும்.
பூமிப்பந்தினை போர்த்தியிருக்கும் இருளானது ஆதவன் உதிக்கும்போது அகன்று போவதுபோல, பேரொளியாம் இறைவன் நம் வாழ்வில் வந்திடும்போது நம்முடைய வாழ்வைக் கவ்வியிருக்கும் காரிருள் காணாமற்போகும் என்பது தெளிவு. அறையின் இருட்டை விரட்ட விளக்கு ஏற்றும் நாம் ஆன்மாவின் இருட்டை நீக்க ஆண்டவனை அழைக்க முற்படுவோம். விழாக்களுக்கு வண்ண விளக்குகள் எவ்வளவு அழகோ, அதைவிட வாழ்க்கைக்கு கடவுள் எனும் பேரொளி அழகோ அழகு. கடவுளைவிட வாழ்வெனும் விழாவிற்கு வண்ணம் சேர்க்கும் பெரு விளக்கு வேறொன்றும் இல்லை.
பாவத்தால் இருட்டுக்குள் வீழ்ந்தது மானுடம். இருளிலேயே அது வாழவும் பழகியது. ஒளி அதற்கு அச்சம் தருவதாய் இருந்தது. இருட்டு பழகியதால் ஒளி அதற்கு பிடிக்கவில்லை. ஒளியை வெறுத்தது. ஒளியாம் கடவுள் இருளில் தவிக்கும் மனிதர்களைத் தேடி வந்தபோது, மனிதர்கள் ஒளியாம் கடவுளை வரவேற்கவில்லை. ஏனென்றால் ஒளி அவர்களுக்கு பயம் தந்தது. மனிதர்கள் நல்லவர்களாய் இருந்தால் ஒளியை விரும்பலாம். ஆனால் அவர்களோ தீயவர்களாய் இருந்ததால் ஒளியைவிட இருளையே அதிகம் விரும்பினர். ஒளியைத் தேடி எவரும் வரவில்லை என்கிறது இன்றைய நற்செய்தி. உலகில் ஒளியைவிட இருளுக்கே வரவேற்பு நிறைய இருந்தது.
உலகின் ஒளியாய் வந்துதித்த இயேசு, இருளில் வாழும் மக்களிடம் நெருங்கிச் சென்றார். ஆனால் அவர்களோ அவரைவிட்டு விலகிப்போனார்கள். ஒளியிடம் வருவது என்பது அவர்களிடம் நல்ல மாற்றங்களை எதிர்பார்த்தது. அவர்களோ ஒளியில் வாழ்வதற்கேற்ற வாழ்வு மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள தயாராக இல்லை. நல்லோர் இருளில் இருப்பதில்லை. இருளில் இருப்போர் நல்லோர் ஆவதுமில்லை. தீயோர் ஒளியில் இருப்பதே இல்லை. ஒளியில் இருப்போர் தீயோர் ஆவதுமில்லை. ஆன்மாவின் இருளகற்றிட ஆண்டவரை அழைப்போம். ஒளியில் வாழும் மக்களுக்குரிய நடத்தைகளால் நம்மை அணி செய்வாம். பகலில் நடப்பதுபோல நடத்தைகளை மாற்றி அமைப்போம். ஒளியின் மக்களாய் உலகில் வாழ்ந்திட, ஒளியை விரும்புவோம். ஒளியின் பக்கம் ஓடி வருவோம்!