Monday, 15 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 வாழ்வு தரும் வார்த்தையின் மீது நம்பிக்கை வைப்போம்!

யோவான் 4:43-54



வார்த்தைக்கு வடிவமில்லை. ஆனால் அந்த வடிவமில்லாத வார்த்தை நம் வாழ்க்கைக்கு வடிவம் தரும். வார்த்தை என்பது வலிமைமிக்கது.  வார்த்தை வாழ்வும் கொடுக்கும், அதே சமயத்தில் வாழ்வையும் பறிக்கும். மனிதர்களின் வார்த்தையே இவ்வளவு ஆற்றலோடு செயல்படுகிறதென்றால், இறைவனின் வார்த்தையானது இன்னும் எவ்வளவு இணையில்லா வல்லமையோடு செயல்பட முடியும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இறைவனின் வார்த்தையே உலகைப் படைத்தது. ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உண்டாக்கியது கடவுளின் வார்த்தை. அந்த வல்லமையான வார்த்தை இயேசுவில் வடிவமானது. இயேசுவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனிதர்களின் வாழ்வின் பெரும் சக்தியாக விளங்கியது என்பதில் சந்தேகமில்லை.      

இன்றைய நற்செய்தியில் கப்பர்நாகும் என்ற ஊரில் அரச அலுவலர் ஒருவர் இயேசுவைச் சந்திக்கிறார். கப்பர் நாகும் : அதாவது எபிரேய மொழியில் ‘கெபர்’ என்பதற்கு ஊர் என்று அர்த்தம். ‘நாகும்’ என்பது பழைய ஏற்பாட்டு இறைவாக்கினரான நாகூமின் பெயர். ஆக கப்பர்நாகும் என்பதற்கு ‘நாகூம் என்ற இறைவாக்கினரின் ஊர்’ என்பது பொருள். இந்த சிறப்புக்குரிய இறைவாக்கினரின் ஊராகிய கப்பர்நாகுமில்தான் இயேசுவும் ஓர் இறைவாக்கினாராய் இறைவனின் வாக்கை போதிப்பவராய் இருந்தார். ஆனால் இறைவாக்கினரின் வாழ்வும் பணியும் பற்றி நன்கு தெரிந்திருந்த யூதர்களே இயேசு என்னும் ஒப்பற்ற அந்த இறைவாக்கினரின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. யூதர்கள் அதுவும் இறைவாக்கினர் ஒருவரின் பெயர் கொண்ட ஊரின் மக்களே இறைவனின் வார்த்தையை எடுத்துரைக்கும் இயேசுவின் மீது நம்பிக்கைகொள்ள மறந்தபோது, மறுத்தபோது, யூதர் அல்லாத புற இனத்தவராகிய ஓர் அரச அலுவலர் இயேசுவின் வார்த்தையின் மீது கொண்டிருந்த அப்பழுகற்ற, அசைக்க முடியாத, ஆழமான நம்பிக்கையை இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. 

இயேசுவின் வார்த்தையின் மீது தன் நம்பிக்கை நங்கூரத்தை இட்டவர் பிற இனத்தவராகிய அந்த அரச அலுவலர். சமயம், அரசியல் மற்றும் அதிகார வட்டத்தில் யூதர்களிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்டு நிற்கிற அம்மனிதன், இயேசுவின் வார்த்தை மீது கொண்டிருந்த நம்பிக்கையில் எந்த யூதரும் அவருக்கு ஈடு கொடுக்க முடியாது. இயேசுவின் மனம் கவர்ந்த ஒரு நம்பிக்கையாளர்களுள் இவரும் ஒருவர். பிற இனத்தவராக இருந்தபோதும் தன்னுடைய நம்பிக்கையை அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், மருத்துவர்கள் என்று எந்த மனிதர்களின் பொய்யான வெற்று வார்த்தைகளின் மீதும் வைக்காமல், இயேசுவின் வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்தார். பார்க்கின்ற வடிவங்களில் நம்பிக்கை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் பார்க்க முடியாத வடிவமற்ற வார்த்தையில் நம்பிக்கை கொண்ட இம்மனிதர், நம்முடைய நம்பிக்கை வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். நாமும் இவரைப் போன்று வாழ்வு தரும் வார்த்தையின் மீது நம்பிக்கை வைப்போம்!