அக்கறைகாட்ட ஆண்டவருண்டு! ஆனந்தம் அடைவோம்!
யோவான் 5:1-3, 5-16
‘மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்னும் கூற்றை நாம் அறிந்திருக்கிறோம். நம்மைப் படைத்த இறைவன் நம்மை பத்திரமாக பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கையை இது நமக்கு நினைவூட்டுகிறது. கல்லுக்குள் ஒளிந்திருக்கும் தேரைக்குக்கூட உணவூட்டுகிறவர் கடவுள். எல்லோரும் இன்புற்று வாழவேண்டுமென்று விரும்புவர் நம் இறைவன் ஒருவர் மட்டுமே. பெற்றெடுத்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவது எப்படி பெற்றோரின் பொறுப்பாக இருக்கிறதோ, அதே போன்று தான் படைத்த உயிர்களை தாங்கிப்பிடிக்க வேண்டியதும் அந்த வல்ல தெய்வத்தின் நல்ல பொறுப்பு என்பதை விவிலியம் பல நிகழ்வுகளின் வழியாக நமக்கு எடுத்துரைக்கிறது.
எவ்வளவுதான் கடவுள் நம்பிக்கையில் கொடிகட்டி பறந்தாலும் துன்பத்தில் தனித்துவிடப்படும் நேரங்களில் எனக்கென்று யாருமில்லையே என்கிற அங்கலாய்ப்பும் ஆதங்கமும் நம்மில் பலருக்கு அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அப்படிப்பட்ட சூழல்களில் எனக்கென்று ஒருவர் உண்டு. என் நலம் நாடும் நல்லவர் அவர். என்னைப் படைத்தவரே அவர் என்கிற பக்குவம் நமக்கு நிச்சயம் பிறக்க வேண்டும். என்னை அன்பு செய்யவும் என்மீது அக்கறை காட்டவும் எனக்கு யாருண்டு? என்று தவித்து நிற்கும் மனிதர்களுக்கு நம்மீது அக்கறைகாட்ட நம்மைப் படைத்தவர் நமக்குண்டு என்கிற நல்ல செய்தியை இன்றைய நற்செய்தி தருகிறது.
இன்றைய நற்செய்தியில் எருசலேமின் ஆட்டு வாயிலுக்கு அருகிலுள்ள பெத்சதா என்கிற அக்குளத்தருகில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல் நலமற்று இருந்த அம்மனிதரின்மீது இயேசு அக்கறைகாட்டுகிறார். ‘என்னைக் குளத்தில் இறக்கிவிட யாருமில்லை’ என்று அம்மனிதர் இயேசுவிடம் சொல்லிய அவ்வார்த்தைகளில் அவருடைய தனிமையின் வலியும் வேதனையும் நமக்குப் புரிகிறது. என் நலம் நாடும் நல்ல உள்ளங்கள் எதுவும் என் வாழ்க்கையில் எனக்கு இல்லையே என்கிற அவருடைய வருத்தத்தை இயேசு புரிந்துகொள்கிறார். யாருமில்லாத அம்மனிதருக்கு எல்லாமாய் நான் இருக்கிறேன் என்று இயேசு செயலில் காட்டுகிறார். அம்மனிதரை தன்னுடைய அக்கறை என்கிற குளத்தில் இறக்கி அற்புதமாய் சுகம் பெற்றிட செய்தார்.
தனிமையின் வலியும் வேதனையும் நம் இயேசுவுக்கு நிச்சயம் நன்கு புரியும். ஏனென்றால் இயேசு தன்னுடைய வாழ்வில் தனிமையின் வலியை வேதனையை நிறைய அனுபவித்திருக்கிறார். அக்கறைகாட்டப்படாத மனிதர்களுக்கு அக்கறைகாட்டும் அன்புள்ளம் ஆண்டவர் இயேசுவுடையது. யாருமில்லை எனக்கு என்று சொல்லி விரக்தியோடு வாழ்வின் விளிம்பில் வாடிப்போக வேண்டாம். அந்த ஏழை இலாசரைப் போல உலகில் உனக்கென்று யாருமில்லாமல் இருக்கலாம். ஆனால் உலகைப் படைத்தவரே உன்மீது அக்கறைகொள்வார். ஆகவே அக்கறைகாட்ட ஆண்டவருண்டு! ஆனந்தம் அடைவோம்!