Wednesday, 17 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 இறைவனின் விருப்பமே இனி நம் விருப்பம் ஆகட்டும்!

யோவான் 5: 17-30



மனித வாழ்வில் விருப்பங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பது உண்டு. விருப்பங்கள் இல்லாத மனிதரும் இல்லை. அந்த விருப்பங்கள் ஏற்படுத்தாத திருப்பங்களும் உலகில் இல்லை. எல்லா நேரங்களிலும் நமது எல்லா விருப்பங்களும் சரியாக இருப்பது இல்லை. விருப்புகளும் வெறுப்புகளும் மட்டுமே நம்முடைய வாழ்க்கையில் இறுதிவரை நம்மை அலைக்கழிக்கின்றன. நமது விருப்பு இன்னொருவருக்கு வெறுப்பாக இருக்கலாம். நமக்கு வெறுப்பாய் இருப்பது இன்னொருவருக்கு விருப்பமாக இருக்கலாம். ஆம், ஒருவருக்கு அமிழ்தாய் இருப்பது இன்னொருவருக்கு நஞ்சாய் அமையலாம். 

மனிதர்கள் எப்போதும் தங்கள் விருப்பு வெறுப்புகளின்படியே வாழ்வில் செயலாற்றுகிறார்கள். தன் விருப்பத்தை தலையில் வைத்து ஆடும் மனிதர்கள், அடுத்தவரின் விருப்பத்தை காலில் போட்டு மிதிப்பதும் இங்கு நாளும் நடக்கும் அத்துமீறலே. தனக்கென்று மட்டுமே நலம் விரும்புவது மனிதரின் பண்பு. தரணிக்கே நலம் விரும்புவது தெய்வத்தின் பண்பு. கடவுளின் விருப்பம் எப்பொழுதும் எல்லோருக்கும் நல்லது நினைக்கும் ஒன்று. மனிதர்களின் விருப்பமோ நான், எனது, என்னுடைய என்று கூண்டுக்கிளி போன்றது. இந்த தன் விருப்பச் சிறை வாசத்திலிருந்து விடுதலை பெற்றிடவே இறைவன் மனிதரை அழைக்கிறார். அவரது விருப்பத்தை நமதாக்கிட நம்மைக் கேட்கிறார்.

தொடக்கத்தில் முதல் பெற்றோர் கடவுளின் விருப்பத்தை காலில் போட்டு மிதித்தனர். தங்கள் விருப்பத்தை தலையில் தூக்கிவைத்து ஆடினர். இறைவனின் விருப்பத்தை நம் வாழ்விலிருந்து விலக்கினால் பாவமும், சாபமும் மட்டுமே நம்மைத் தொடரும் என்பதற்கு ஆதாம் ஏவாளின் வாழ்வு நமக்குப் பாடம். மீட்பின் வரலாற்றில் எப்பொழுதெல்லாம் இறைவனின் விருப்பம் மனித வாழ்விலிருந்து விலக்கி வைக்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மனித வாழ்வில் வருத்தங்களும் தேக்கங்களும் ஏற்பட்டன. இறைவனின் விருப்பத்தை தனதாக்கி வாழ்ந்தவர், நம்மையும் அப்படி வாழ அழைக்கிறவர் இயேசு. இன்றைய நற்செய்தியில் இயேசு தந்தையின் விருப்பப்படியே தான் செயலாற்றுவதாக சொல்கிறார். தந்தையின் விருப்பமே தனது விருப்பம் ஆனதால் தந்தையோடு தானும் இணைந்து செயலாற்றுவதாகவே கூறுகிறார். 

மனித விருப்பங்கள் தன்னலத்தில் தோன்றும். இறை விருப்பமோ பொது நலத்தை போற்றும். மனித விருப்பங்கள் சிலரை வாழ வைக்கும். இறை விருப்பமோ எல்லோரையும் வாழ வைக்கும். மனித விருப்பங்கள் நிழல்கள். இறை விருப்பமோ நிஜம். நிழல்களை விடுத்து நிஜத்தை பற்றிக்கொள்வோம். மனித விருப்பங்களை மக்கச் செய்து இறை விருப்பத்தை இறுதிவரை வாழ்ந்திடவே இயேசு நம்மை அழைக்கிறார். ‘என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்’ என்று சொன்ன இயேசுவைப் பின்பற்றி நாமும் நம்மைப் படைத்தவரின் விருப்பத்தை நாடப் பழகுவோம். இறைவனின் விருப்பமே இனி நம் விருப்பம் ஆகட்டும்!