வாழ்வு பெறுவதற்கு வாழ்வின் மரத்திடம் விரைந்து வருவோம்!
யோவான் 5:31-47
எங்கு சென்றால், எவரிடம் சென்றால் எது கிடைக்கும் என்று நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். நற்சுகம் வேண்டுமா, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மருத்துவரிடம் செல்ல வேண்டும். அறிவு வேண்டுமா, பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஆசிரியர்களிடம் செல்ல வேண்டும். இவ்வாறு தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்துகொள்ள வழிமுறைகளை தெரிந்து வைத்திருக்கிறோம். எங்கு சென்றால் வேலை ஆகும், எவரிடம் சென்றால் வேலை ஆகும் என்பதெல்லாம் இச்சமூகத்தில் நாம் போகிறபோக்கில் கற்றுக்கொள்கிறோம். ஆனால் எல்லாம் இருந்தும் வாழ்வு இல்லாமல் போனால்?
வாழ்வு என்பது கடைச் சரக்கல்ல. வாழ்வு என்பது கடவுள் தரும் கொடை. வாழ்வினைக் கடைவீதியில் அலைந்து காசு கொடுத்து சொந்தமாக்கிட முடியாது. வாழ்வின் ஊற்று நம் கடவுள். அவரிடமிருந்தே நாம் நமது வாழ்வைப் பெற்றுக்கொள்கிறோம். ஆனால் அக்கடவுளை நம் வாழ்விலிருந்து இழக்கின்ற போது நாம் வாழ்வையே இழக்கின்றோம் என்னும் உண்மை நமக்கு பல வேளைகளில் புரிவதில்லை. கடவுளின் இடத்தை உலகில் எதுவும் எவரும் எப்போதும் நிரப்ப முடியாது. ஆம், வாழ்வு கடவுளால் மட்டுமே கொடுக்கப்படும் ஒன்று. அவரைத் தவிர வேறு எதுவும் எவரும் வாழ்வை வழங்கிட முடியாது.
தொடக்கநூலில் ஆதாமும் ஏவாளும் வாழ்வின் ஊற்றாம் கடவுளை மறந்து விலக்கப்பட்ட கனி இருக்கும் மரத்தை தேடிப் போனார்கள். எந்த மரத்தால் தங்களுக்கு வாழ்வு கிடைக்கும் என்று நம்பினார்களோ, அந்த மரத்தினால் அழிவையே அவர்கள் பெற்றுக்கொண்டனர். வாழ்வு பெறும் பொருட்டு அவர்கள் போன இடம் தவறு. படைப்புக்கள் மனிதருக்கு ஒருபோதும் நிலை வாழ்வை, நிறைவாழ்வை தந்துவிட முடியாது. படைத்தவரே நம்மை நிறைவாழ்வுக்கு நிலைவாழ்வுக்கு இட்டுச்செல்ல முடியும்.
இன்றைய நற்செய்தியில் ‘வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை’ என்று இயேசு யூதர்களிடம் வருத்தத்தோடும் ஆதங்கத்தோடும் எடுத்துரைக்கிறார். யூதர்கள் தங்களுக்கான வாழ்வு திருச்சட்டத்திடம், மோசேயிடம் இருக்கின்றதென்று நம்பினர். ஆனால் உண்மையில் வாழ்வின் ஊற்றாம் இயேசுவே அவர்களைத் தேடி வந்திருந்தபோது அவர்கள் அவரைப் புறக்கணித்தனர்.
இன்று நம்முடைய வாழ்வை நாம் எதிலே தேடுகிறோம்? வாழ்வைத் தேடி நாமும் சித்தாந்தங்களிடமும், மனிதர்களிடமும் செல்வதிலிருந்து எச்சரிக்கையாய் இருப்போம். அதிர்ஷ்டத்தில், ஜோதிடத்தில், ஜாதகத்தில், நல்ல நேரத்தில் நம் வாழ்வை தேடும் நிலையிலிருந்து விடுதலை பெறுவோம். திருச் சிலுவையே நமக்கான புதிய வாழ்வின் மரம். அதில் தொங்கிய இயேசுவே ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வின் கனி. ஆகவே, நமக்கான வாழ்வின் கனியாம் இயேசுவின் வழியாக வாழ்வு பெறுவதற்கு வாழ்வின் மரத்திடம் விரைந்து வருவோம்!