Friday, 19 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 கடவுளின் கனவுகளுக்கு உயிர்கொடுப்போம்!

மத்தேயு 1:16,18-21,24



மனித வாழ்வில் கனவுகள் முக்கியமானவை. கனவும் வாழ்வும் பிரிக்க முடியாதவை. வாழ்க்கையில் கனவும் அக்கனவை நனவாக்கிடும் ஆற்றலும் இருந்தால் வாழ்வில் வசந்தம் நிச்சயம் மலரும். கனவுகள் காணாத மனிதரும் இல்லை. மனிதர்கள் கண்டிராத கனவுகளும் இல்லை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். கனவிலேயே வாழ்வினைக் கடந்தவர்களும் உண்டு. கனவை நனவாக்கிட வாழ்வில் கடைசிவரை உழைத்து உயர்ந்தவர்களும் உண்டு. கனவில் வாழ்வது அல்ல, கனவை நனவாக்க வாழ்வதே மனிதருக்கு அழகு. 

மனிதர்கள் தங்களுக்காக கனவுகள் காண்பார்கள். மகான்கள் பிறருக்காக கனவுகள் காண்பார்கள். பொதுவாக தங்கள் வாழ்வின் ஏற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் மனிதர்களின் கனவுகள் அமையப்பெறுவதுண்டு. தன்னுடைய சுக துக்கங்களையும், விருப்பு வெறுப்புகளையும், ஆசைகளையும் அடிப்படையாக வைத்து மனிதனின் கனவுகள் உருப்பெறுகின்றன என்பதே எதார்த்தம். நம்முடைய மூளை எவற்றை அதிகம் சிந்திக்கிறதோ அதுவே நம்முடைய கனவுகளில் பிரதிபலிக்கும் என்று சொல்வார்கள். அதிக அழுத்தம்பெற்ற எண்ணங்களும் சிந்தனைகளும் கனவுகளில் வெளிப்படும். பயமே சிந்தையாக இருந்தால் அச்சுறுத்தும் கனவுகளும், தோல்வியே எண்ணமாக இருந்தால் தோற்கடிக்கப்படும் கனவுகளும், மகிழ்ச்சியே எண்ணமாக இருந்தால் மகிழ்ச்சிக்குரிய கனவுகளும் வருவதுண்டு. எதை அதிகம் நம்முடைய எண்ணம் ஆக்கிரமிக்கிறதோ அதுவே கனவுகளில் வெளிப்படும். 

இன்றைய நற்செய்தியில் புனித யோசேப்பு தன்னுடைய வாழ்வில் ஒரு மாபெரும் கனவு காண்கிறார். அது இறைவனின் தூதரை அவருக்கு அறிமுகப்படுத்திய கனவு. இறைத்தூதரின் வார்த்தைகளை கேட்கச் செய்த கனவு. பிறருக்காக வாழப் பணித்த கனவு. அடுத்தவரை அன்புடன் ஏற்றக்கொள்ளத் தூண்டிய கனவு. மனைவியாக மரியாவை ஏற்று வாழப் பணித்த கனவு. தன்னுடைய ஆசைகளை விடுத்து ஆண்டவரின் ஆசைகளைக் கைக்கொண்டு வாழ அழைத்த கனவு. 

புனித யோசேப்பு தனக்காக கனவு கண்டவர் அல்ல. கடவுளின் விருப்பத்தை கனவாக கண்டவர். ஆம், கடவுளையும் அவரின் கட்டளையையும் விருப்பத்தையுமே அதிகம் நாடியதாலும், சிந்தித்ததாலும் அவருடைய கனவும் கடவுளின் விருப்பத்தை அவருக்கு சொல்வதாகவே அமைந்திருந்தது. அவரைப்போன்று நாமும் கடவுளை நம் கண்முன் கொண்டு வாழப் பழகும்போது நம்முடைய கனவுகளும் கடவுளின் விருப்பங்களை நமக்கு வெளிப்படுத்தும் சிறப்புக்குரியவையாக  அமையும். தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த யோசேப்பு கடவுளின் கனவுக்கு உயிர் கொடுத்தார். கடவுளின் விருப்பத்தை வெளிப்படுத்திய அவருடைய கனவுகளை நனவாக்கிடவே காலம் முழுவதும் வாழத் துணிந்தார். அவரின் வழியில் நாமும் கடவுளின் கனவுகளுக்கு உயிர்கொடுப்போம்!