விருட்சமாய் எழுந்திட விதையாய் விழுந்திடுவோம்!
யோவான் 12: 20-33
ஒவ்வொரு விதையிலும் ஒரு காடு அடங்கியிருக்கிறது எனச் சொல்வார்கள். விதைகள் விருட்சங்களாகும் ஆற்றல் பெற்றவை. விதைகள் தங்களை இழக்கத் தயாராகும்போது மட்டுமே தங்களுள் ஒளிந்திருக்கும் விருட்சங்களை வெளியுலகுக்கு வெளிக்காட்ட முடியும். விதைக்க மனமில்லாமல் அறுக்க மட்டும் ஆசைப்படுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? அறுவடை செய்ய ஆசை வரும் முன்னதாக, அதற்காக விதைத்திருக்க வேண்டும் அல்லவா!
விதையாய் பூமியில் விழுவது என்பது தன் சுயத்தை அழிக்க தயாராவதைக் குறிக்கிறது. தன்னுடைய நிறம், உருவம், எடை என்று அனைத்தையும் இழக்க முன்வரும் விதை மட்டுமே, தனக்குள் ஒளிந்திருக்கும் விருட்சத்தை வெளிப்படுத்தும். தன்னை அழித்துக்கொள்ள விரும்பாத விதை விருட்சமாய் ஒருபோதும் மாறுவதில்லை. இன்று விருட்சங்கள் வான் நோக்கி உயர்ந்து நிற்கின்றன என்றால் சில விதைகள் தங்களை மண்ணில் விழச் செய்தன என்பதே உண்மை. மண்ணில் விழுந்த விதைகள் மண்ணோடு சமரசம் செய்துகொண்டு மக்கிப்போகாமல், மண்ணோடு போராடி மண்ணைக் கிழித்து மறுபிறவி எடுப்பதால் விருட்சங்கள் இன்று விண்ணை முட்டி நிற்கின்றன.
இன்றைய நற்செய்தியில் இயேசு கோதுமை மணி உருவகத்தைக் குறித்து பேசுகிறார். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என்று இயேசு போதிக்கிறார். தன்னுடைய மாட்சிக்குரிய பாடுகளையும் இறப்பையும் குறித்தே இயேசு இவ்வாறு பேசினார். கோதுமை மணியைப் போன்று தானும் மண்ணில் விழுந்தால் மட்டுமே மீட்பு என்னும் விளைச்சலை இம்மானுடம் அறுவடை செய்ய முடியும் என்பது இயேசுவுக்கு நன்கு தெரியும். எனவே இயேசு தன்னையே மண்ணுக்குள் புதைத்திட தயாராகின்றார்.
இயேசு என்னும் கோதுமை மணி தன்னை அழித்துக்கொண்டதால் இன்று இறையாட்சி என்னும் மாபெரும் விருட்சம் கொண்டாடப்படுகிறது. ஒரு விதை மடியும்போது மட்டுமே ஒரு காட்டின் உயிர்ப்பு சாத்தியப்படுகிறது. மடிவது ஒரு விதை. எழுவது ஒரு காடு. அழிவது ஒரு விதை. ஆவது ஒரு விருட்சம். விழுவது ஒரு விதை. எழுவது ஒரு வனம். ஆம், நாம் மடிந்தாலும், அழிந்தாலும், வீழ்ந்தாலும் நமக்குள் இருக்கும் இயேசுவை மீண்டும் மீண்டும் உயிர்க்கும்படி செய்வோம்.
மண்ணுக்குரியவை அழிவுறும்போது மட்டுமே விண்ணுக்குரியவை நமக்குள் பிறக்கின்றன. சாவுக்குரியவை நீங்கும்போது மட்டுமே வாழ்வுக்குரியவை நமக்குள் வாசம் வீசுகின்றன. மனிதருக்குரியவை மடியும்போது கடவுளுக்குரியவை நமக்குள் உயிர்க்கின்றன. ஆகவே, விதையாய் விழுவது வீணாய் போவதில்லை. அது விருட்சமாய் நம்மை ஒருநாள் எழச்செய்யும் என்ற நம்பிக்கை வளர்ப்போம். நாமும் இயேசுவைப் போன்று விருட்சமாய் எழுந்திட விதையாய் விழுந்திடுவோம்!