மற்றொரு வாய்ப்பினை மனமார கொடுப்போம்!
யோவான் 8:1-11
இந்த உலகம் பலவீனங்களையும், பாவங்களையும் பெரிதாகப் பார்க்கிறது. இங்கு உறவுகள் தடுமாற்றங்களையும், வீழ்ச்சிகளையும் மிகவும் உன்னிப்பாக உற்று நோக்குகின்றன. நிறைகளைக் காட்டிலும் குறைகளே இங்கு பெரிதுபடுத்தப்படுகின்றன. இழைத்த தவறுகளால் இன்பமான வாழ்வைத் தொலைத்துவிட்டு, மீண்டும் புதிய வாழ்வு வாழ வாய்ப்பு மறுக்கப்பட்டதால், வாழ்வையே முடித்துக்கொண்டவர்களும் இங்கு உண்டு. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் பல உறவுகள் உடையாமல் இருந்திருக்கும். இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருந்தால் சில சுகமான திருப்பங்களும் சுபமான முடிவுகளும் ஏற்பட்டிருக்கும். ஏன், இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் உலகத்தின் வரலாறேகூட மாறிப் போயிருக்கும்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தி அழைத்துவரப்படுகிறாள். குற்றம் உணர்ந்தவளாய், உடைந்த உள்ளமும், நொறுங்கிய நெஞ்சமும் கொண்டவளாய் இயேசுவின் முன் நிற்கிறாள். இதுவரை செய்திட்ட பாவத்தால் இனி செய்வதறியாது திக்கற்று நிற்கிறாள். இனிமேல் இவள் வாழவே கூடாது என்று மக்கள் கூட்டம் மரணத் தீர்ப்பை எழுதிவிட்டது. தவறு செய்த அப்பெண்ணைத் திருத்தவும் யாரும் முயலவில்லை. அவள் திருந்தி வாழ்வதற்கான இன்னொரு வாய்ப்பையும் அவளுக்குத் தருவாரில்லை.
இயேசு வாய்ப்புகளின் வாசலை எவருக்கும் எப்போதும் அடைத்ததில்லை. இப்பொழுது இயேசு அந்த பாவியான பெண்ணுக்கும் புது வாழ்வுக்கான மறு வாய்ப்பை மனதாரக் கொடுக்கிறார். ‘இனிப் பாவம் செய்யாதீர்’ என்று புதிய தொடக்கத்தை அவளுக்கு ஏற்படுத்தி தருகிறார். திருந்தி வாழ்வதற்கான வாய்ப்புகளைக் கடவுள் எப்பொழுதும் தருகிறார். நம்முடைய வாழ்விலும் நமக்கு இன்னொரு வாய்ப்பு என்று நாமும் தினமும் பெற்றுக்கொண்டேதான் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நமக்கு மறு வாய்ப்புதான். நேற்றைய விட இன்று இன்னும் திருந்தி வாழ்வோம், இன்னும் சிறப்பாய் வாழ்வோம் என்று இறைவன் நம்மை நம்புகிறபடியினால் புதிய நாளும் புதிய வாய்ப்பும் நமக்கு வசப்படுகிறது. புது வாழ்வுக்கான மறு வாய்ப்புகளை கடவுளிடமிருந்து பெறுகின்ற நாமும் நம் உறவுகளுக்கு மற்றொரு வாய்ப்பினை மனமார கொடுப்போம்!