ஆண்டவருக்கு உகந்தவற்றையே செய்வோம்!
யோவான் 8: 21-30
மனிதரின் பார்வையில் மதிப்பு பெற வேண்டும் என்கின்ற மனநிலையில் மனிதருக்கு பிடித்த காரியங்களைச் செய்வோர் நம்மில் பலருண்டு. மேலாளருக்கு பிடித்ததை செய்தால் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும் என்று எண்ணி மேலாளருக்கு விருப்பமானபடி பணியாளர்கள் செயல்படுவதும், பெற்றோருக்கு பிரியமானதை செய்தால் கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பார்கள் என்று எண்ணி பெற்றோருக்கு விருப்பமானபடி பிள்ளைகள் செயல்படுவதும் நாம் நன்கு அறிந்ததே. இது சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் எல்லா தரப்பினரிடமும் காணப்படுவதுண்டு.
மனிதருக்கு பிடித்தபடி வாழத் தொடங்கினால் கடவுளைக் காற்றில் பறக்கவிட வேண்டிவரும். மனிதரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டு, பிழைப்பை நடத்தும் கூட்டம் மானுட மதிப்பீடுகளையும், அறநெறி விழுமியங்களையும் தின்று செரித்து ஏப்பம் விட்டுவிடும். இவர்களையே பிழைக்கத் தெரிந்தவர்கள் என்று இவ்வுலகம் சொல்கிறது. ஆனால் மனிதரின் விருப்பு வெறுப்புகளைப் பின்னுக்குத் தள்ளி, மானுட சமுதாயத்தின் மதிப்பீடுகளையும், விழுமியங்களையும் முன்னுக்கு வைத்து வாழ்வோரை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று இவ்வுலகம் பகடி பேசுகிறது.
மனிதருக்கு உகந்தவற்றைச் செய்யத் தொடங்கினால் கடவுளுக்கு உகந்தவற்றை செய்ய முடியாது. மனிதருக்கு உகந்தவை எப்போதும் எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை. ஆனால் கடவுளுக்கு உகந்தவை எப்போதும் எல்லோருக்கும் புனிதமானவை, நன்மையானவை, நேர்மையானவை. உலகத்தின் பார்வையில் பிழைக்கத் தெரிந்தவர்கள் மனிதர்களைத் திருப்திப்படுத்துகிறவர்கள். ஆனால் உலகத்தின் பார்வையில் பிழைக்கத் தெரியாதவர்கள் மனிதர்களை அல்ல கடவுளையே திருப்திப்படுத்துகிறார்கள்.
இன்றைய நற்செய்தியில் மனிதருக்கு உகந்தவற்றையே செய்துகொண்டிருந்த பரிசேயரை இயேசு சாடுகிறார். மனிதருக்கு உகந்தவை என்று அவர்கள் செய்துகொண்டிருந்தவை அனைத்தும் ஒழுக்கக் கேடுகளும் பாவங்களுமே என்று இயேசு சுட்டிக்காட்டினார். ஆண்டவருக்கு உகந்தவற்றையே செய்து அவருடன் இணைந்து நிற்க அவர்களையும் இயேசு அழைத்தார். அதுவே பாவத்திலிருந்து மீண்டெழ வழியுமாகும் என்று அவர்களுக்கு அவர் கற்றுத் தந்தார். மனிதருக்கு உகந்தவற்றைச் செய்யாமல் கடவுளுக்கு உகந்தவற்றையே தான் எப்போதும் செய்துவருவதாகவும், அதனால் கடவுள் தன்னைத் தனியே விட்டுவிடாமல் எப்போதும் தன்னுடன் இருப்பதாகவும் இயேசு பரிசேயருக்கு எடுத்துரைத்தார்.
பரிசேயரைப்போல மனிதருக்கு உகந்தவற்றைச் செய்து, மனிதரை திருப்திப்படுத்தி, உலகில் காரியத்தை சாதித்துக் கொள்ளும் காரியக்கார கூட்டத்தில் நாமும் இடம் பெற வேண்டாம். கடவுளுக்கு உகந்தவற்றைச் செய்தால் அவருடன் காலமும் இணைந்து நிற்போம். ஆகவே நாமும் இயேசுவைப் போன்று எப்போதும் ஆண்டவருக்கு உகந்தவற்றையே செய்வோம்!