உண்மையால் நாம் விடுதலை அடைவோம்!
மனித வாழ்க்கை என்பது உண்மை, போலி எனும் இரு வேறுபட்ட முரண்களுக்கிடையே போராடும் ஒரு போர்க்களமே. எங்கும் போலி எதிலும் போலி என்று போலிகள் நிறைந்த உலகம் இது. இங்கு போலிகளுக்கு மவுசு அதிகம், பொய்களுக்கு வரவேற்பு நிறைய. போலிகளை விரும்பும், பொய்மையை நம்பும் மனிதர்கள் நம்மில் பலர் உண்டு. இதனால் உண்மை ஓரம் கட்டப்படுவதும், நிஜம் ஒதுக்கப்படுவதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. போலிக்கு பரிவட்டம் கட்டி, உண்மைக்கு பாடை கட்டும் பலரை இங்கு நாளும் எதிர்கொள்கிறோம்.
அரசியல், ஆன்மீகம், உறவு, வாணிகம் என எல்லாவற்றிலும் போலிகள் அதிகரித்துப்போன இக்காலத்தில், மறைக்கப்பட்ட உண்மையை, மழுங்கடிக்கப்பட்ட நிஜத்தை மீண்டும் நம்முடைய வாழ்வில் கண்டுகொள்வது காலத்தின் கட்டாயம். போலித்தனத்தை நம்பி ஏமாறாமல் இருப்பதும், போலியாய் நடித்து பிறரை ஏமாற்றாமல் இருப்பதும் விடுதலை வாழ்வுக்கான செயல்பாடுகள். போலிக்கு போகி வைப்பதும் உண்மைக்கு உயிர் கொடுப்பதும் எல்லா மனிதருக்குமான கடமையும் பொறுப்புமாகும்.
மீட்பின் வரலாற்றைக் கூறும் திருவிவிலியம் முழுக்க விரவிக் கிடக்கும் ஒரு யுத்தம் எதுவெனில் அது போலிக்கும் உண்மைக்குமான யுத்தம். பாம்பின் போலியையும், பொய்யையும் நம்பி ஏமாந்துபோன ஏவாளின் கதையில் தொடங்கியது போலியின் வெற்றி. போலியான காயினின் சகோதர பாசத்தை நம்பி உயிரை இழந்த ஆபேல், போலித்தனமான உடன் பிறப்புகளால் விற்கப்பட்ட யோசேப்பு. இப்படியாக தொடர்ந்து பொய்மையும், போலித்தனமும் பலரின் உயிரை, உடைமைகளைக் காவு வாங்கியது. இவ்வாறு போலியின் வெற்றியையும் உண்மையின் தோல்வியையும் மானுட வரலாற்றில் அதிகம் பார்க்க முடியும். அதற்கு காரணம் மானுடம் பொய்க்கு அடிமைப்பட்டதே.
இன்றைய நற்செய்தியில், ‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ என்கிற இயேசுவின் வாக்கு நம்பிக்கைக் கீற்றை நம் மனங்களில் விதைக்கிறது. யூதர்கள் தங்களை ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும், தாங்கள் யாருக்கும் அடிமையில்லை என்றும் பெருமையடித்தபோது, பாவம் செய்கிற எவரும் பாவத்திற்கு அடிமை என்று இயேசு சொல்லி, யூதர்களின் பொய்யான போலியான வாழ்வுமுறையை எடுத்துக்காட்டி, அது பாவத்திற்கு அடிமைப்பட்ட வாழ்வு என்று இயேசு கண்டித்தார்.
‘உண்மையா அது என்ன?’ என்ற பிலாத்தின் கேள்வியே இன்று உலகத்தின் கேள்வியாய் உரக்க ஒலிக்கிறது. உண்மைகள் திரிக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு, போலியும், பொய்யும், புரளியும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன்றைய சமூகத்தில் யூதர்களைப் போன்று பொய்க்கு அடிமையாகாமல், இயேசுவின் வழியில் உண்மையால் நாம் விடுதலை அடைவோம்!