Thursday, 25 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு ‘ஆம்’ சொல்வதில் ஆனந்தம் அடைவோம்!

லூக்கா 1:26-38



தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்கூட தோற்றுப்போகும் சில மனிதர்களின் தலையாட்டும் குணத்திற்கு முன்னால். அதிகார வர்க்கத்திற்கும், ஆளும் மனிதருக்கும் தலையாட்டினால் வாழ்வு வளமாக இருக்கும் என்ற எண்ணம் நம்மிடையே அதிகம் இருப்பது கண்கூடு. கண்ணை மூடிக்கொண்டு கைப்பாவை போல அடுத்த மனிதருக்கு மாறுகின்றவர்கள், தங்கள் வாழ்வினை அடுத்தவர் இழுக்கும் இழுவைக்கெல்லாம் வாழ்ந்து தொலைக்க நேரிடும். உலகில் பலர் அப்படி வாழ்வதையே விரும்புகின்றனர். தங்கள் வாழ்க்கை என்னும் பட்டத்திற்கான நூலை எவரிடமாவது கொடுத்துவிட்டு, பிரச்சனைகள் புயலாய் வந்து நிற்கும்போது சிக்கி சின்னாபின்னமான மனிதர்கள் இங்கு அதிகம்.   

பணத்திற்கு தலையாட்டி, பதவிக்கு தலையாட்டி, அதிகாரத்திற்கு தலையாட்டி, உறவுக்கு தலையாட்டி, அடக்குமுறைக்கு தலையாட்டி என்று மொத்தத்தில் கடைசிவரை கடவுளைத் தவிர மற்ற அனைத்திற்கும் தலையாட்டி வாழும் தரங்கெட்ட  வாழ்வு நம்மில் பலருடையதாக இருக்கிறது. வாழ்க்கை பட்டத்தின் நூல் கடவுளின் கையில் இருந்தால் நமக்கு பாதுகாப்பும் பராமரிப்பும் நிச்சயம் உண்டு. ஆனால் அவரைத் தவிர வேறு ஒருவரின் கையில் நம்மை ஒப்படைப்பது மிகப் பெரிய ஆபத்தே. மனிதருக்கு ஆம் சொல்லி, மங்கிப்போகும் மண்ணின் மகிழ்ச்சியை மடியில் கட்டிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். மாறாக ஆண்டவருக்கு ஆம் சொல்லி, விண்ணக மகிழ்ச்சியில் நம் வாழ்க்கையின் நிறைவை அடைவோம். 

இன்றைய நற்செய்தியில் அன்னை மரியா தன் வாழ்வில் முக்கியமான ஒரு பதில் தருகிறார். மெசியாவின் தாயாக இருப்பாய் என்று, தன்னிடம் மங்கள வார்த்தை சொல்லிய கபிரியேல் வானதூதருக்கு அழுத்தமாய் ஆம் சொல்லிய நாசரேத்து இளம் நங்கை கன்னி மரியா. தரணியின் மனிதர்களுக்கு அல்ல தெய்வத்துக்கு மட்டுமே தலையாட்டும் நெஞ்சுரம் கொண்டவர் மரியா. ஏதோ ஒரு நாளில், ஒரு நிகழ்வில் மட்டுமல்ல, வாழ்வின் இறுதிவரை ஆண்டவருக்கு மட்டுமே ஆம் என்று சொல்லி வாழ்ந்தவர் மரியா. ஆண்டவருக்கு ஆம் சொல்லி அன்னை மரியாவின் பிள்ளைகளாகிய நாமும் அவரைப் போன்று இறைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். 

உலகத்தையே எதிர்த்து கடவுளுக்கு தலையாட்டினார் கன்னி மரியா. உலகிற்கு தலையாட்டினால் நம்மால் ஒருபோதும் கடவுளுக்கு தலையாட்ட முடியாது. யாருக்கு தலையாட்டினால் நமது வாழ்வில் நிறைவு, நிம்மதி, மகிழ்வு, மீட்பு ஆகியவை கிடைக்கும் என்பதெல்லாம் நமக்கு நன்கு தெரியும். நமக்கு எது நல்லதென்று நம்மைவிட நம்மைப் படைத்த நம் கடவுளுக்கு நன்கு தெரியும். உலகத்தின் கைகளிலோ, மனிதரின் கைகளிலோ அல்ல, மாறாக ஆண்டவரின் கைகளில் முழுமையாய் சரணடைவதே நம் வாழ்வின் நிறைவுக்கு வழி என்பதை உணர்ந்து, வாழும் காலம் முழுவதும் ஆண்டவருக்கு ‘ஆம்’ சொல்வதில் ஆனந்தம் அடைவோம்!