நமக்குள் உறைந்திருக்கும் தெய்வீகம் காண்போம்!
யோவான் 10:31-42
முகங்களைவிட முகமூடிகளுக்கே இங்கு முதல் மரியாதை. முகங்களைக் காட்டிலும் முகமூடிகளுக்கே நாம் அதிகம் பழக்கப்பட்டிருக்கிறோம். சாதி, சமயம், மொழி, இனம் போன்றவைதான் உண்மையில் நாம் என்று எண்ணும் அளவிற்கு நாம் அணிந்திருக்கும் முகமூடிகள் இன்று ஏராளம். இதனால் நம் உண்மை உருவையும் சாயலையும், இயல்பையும் தன்மையையும் நாம் மறக்கிறோம், மறைக்கிறோம், மழுங்கடிக்கிறோம். இடத்திற்கும் ஆள்களுக்கும் நேரத்திற்கும் ஏற்றாற்போல முகமூடிகளை அணிந்துகொள்வது நமக்கு மிகவும் பழக்கப்பட்டுவிட்டது. முகமூடிகளையே தங்களுடைய உண்மைத்தன்மை என்று சொல்லிக்கொண்டு, மெய்யை மறந்து பொய்யின் போர்வைக்குள் மனிதர் பதுங்கிக் கிடக்கின்றனர். தங்களின் முகமூடிகளைக் களைவது மனிதர் பலருக்கு மிகவும் கடினமான செயல். ஏனென்றால் தங்களது உண்மையான முகத்தையும், உருவத்தையும்விட முகமூடியே அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது.
மனிதர்கள் தங்கள் முகத்தை மறைத்து அணியும் முகமூடியினால் பிறருக்கு தங்கள் உண்மையான அடையாளத்தையும், உண்மைத் தன்மையையும் மறைக்கின்றனர். உள்ளே ஒன்றும் வெளியே வேறொன்றுமாக தங்கள் வாழ்வில் முரண்பட்டு நிற்கின்றனர். அடுத்தவருக்கு தங்களை மறைத்து, மறைத்து இறுதியில் தாங்களே தங்கள் உண்மைத் தன்மையை அறியாமல் அவதிப்படுகின்றனர். இவ்வாறு நம் உண்மையான முகமும், குணமும் நமக்கே பல நேரங்களில் தெரியாமல் போகிறது. இப்படியே நம்முடைய வாழ்வு அமைந்துபோனால் முகமூடிகளே நம்முடைய முகங்களாகிவிடும் அவலம் ஏற்படும்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் மீது குற்றம் ஒன்று சுமத்தப்படுகிறது. அது இயேசு தன்னையே கடவுளாக்கிக் கொள்கிறார் என்பதாகும். இயேசு கடவுள் என்கிற முகமூடியை அணிந்து மக்களை ஏமாற்ற எண்ணியதில்லை. மாறாக கடவுள் தன்மையே இயேசுவுடைய உண்மைத்தன்மையும் உண்மை இயல்பும் ஆகும். கடவுளின் முகமே அவருடைய உண்மை முகம் என்பதை ஊரறிய அவர் தனது வார்த்தையிலும் வாழ்க்கையிலும் எடுத்துக்காட்டினார். ஆம், இயேசுவின் முகமே கடவுளின் முகம். தனக்குள் இருக்கும் தெய்வீகத்தை தானும் உணர்ந்து பிறரும் உணரும்படி இயேசுவின் வாழ்வு அமைந்திருந்தது.
முகமூடிகளை அணிந்து ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த யூதத் தலைவர்களையும், உண்மை முகங்களை மறந்து மாயைக்குள்ளும் பொய்க்குள்ளும் பொழுதைக் கழித்த மக்கள் கூட்டத்தையும் இயேசு கடவுளின் முகங்களாக இம்மண்ணில் வாழும்படி அழைத்தார். எல்லோருக்குள்ளும் இறைச்சாயல் உறைந்திருக்கிறது என்பதை உறுதிப்பட உரைத்தார். நாம் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள் என்பதே இயேசுவின் படிப்பினை. தொடக்கநூலில் படிப்பதுபோல நாம் அனைவரும் கடவுளின் சாயலிலும் உருவிலும் உண்டாக்கப்பட்டவர்கள். எனவே நாம் அணிந்திருக்கும் முகமூடிகளைக் கிழித்தெறிந்து நமக்குள் உறைந்திருக்கும் தெய்வீகம் காண்போம்!