பிறருக்காக பலியாக முன்வருவோம்!
யோவான் 11:45-57
அடுத்தவரின் முதுகில் ஏறி சவாரி செய்வது இங்கு பலருக்கு விருப்பமான செயலாக இருக்கிறது. ஆனால் அடுத்தவரை முதுகில் ஏற்றிச் சுமப்பது என்பது பலரால் விரும்பப்படாத ஒன்றாகவே இருக்கிறது. அடுத்தவரின் முதுகில் ஏறினால் நமக்கு சுகம் பிறக்கிறது. ஆனால் அடுத்தவரை நம் முதுகில் ஏற்றினால் நமக்கோ சோகம் வருகிறது. நாம் வாழ பிறரை பலியாக்குவோம். ஆனால் பிறர் வாழ நாம் நம்மைப் பலியாக்கிட தயங்குவோம். இன்னும் எவ்வளவு நாள் அடுத்தவரின் தியாகத்தில் நாம் வாழ்வது? இன்னும் எத்தனை பேரின் வாழ்வை நமக்காக பலியாக்கப் போகிறோம்?
பயன்பாட்டுத் தத்துவம் மிகவும் பெருகிப்போன காலச்சூழலில் நாம் இருக்கிறோம். நாம் வாழ வேண்டுமென்றால் எவரையும் எதுவும் செய்யலாம் என்னும் கருத்து இங்கு எல்லோருக்குள்ளும் விதைக்கப்பட்டுவிட்டது. இது இன்று மனித இதயங்களை இறுகச் செய்துவிட்டது. எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்னும் சொல்லாடல் நமக்கு நன்கு தெரிந்த ஒன்று. இதுதான் இன்றைய மனிதர்களின் எண்ணமும் வாழ்வும் என்பதை எல்லோரும் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வோம். அடுத்தவரின் அழிவில் தங்களது வாழ்வை கட்டமைக்கும் கயவர் கூட்டம் அதிகம். இவர்கள் பிறருடைய கல்லறையில் தங்களுடைய மாளிகையை கட்டியெழுப்பும் கல் நெஞ்சம் படைத்தவர்கள்.
இன்றைய நற்செய்தியில் தலைமைச் சங்கத்தினர் கூடி இயேசுவுக்கான சாவுத் தீர்ப்பை முடிவு செய்கிறார்கள். அக்கூட்டத்தில் தலைமைக் குரு கயபா ‘இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது’ என்று சொன்னார். மானுடத்தின் வாழ்வுக்கு தன்னுடைய வாழ்வை இயேசு விலையாகக் கொடுப்பார் என்பதன் அடையாளமே இது. இயேசுவின் வாழ்வும் பணியும் பிறருக்கானதாகவே எப்போதும் அமைந்திருந்தது. தன்னைப் பற்றி ஒருபோதும் அவர் சிந்திக்கக் கூட இல்லை. அவருடைய பணி வாழ்வு அவருடைய பலிக்கான வெள்ளோட்டமே.
பிறரைப் பலியாக்கி தங்களை வாழ்விக்க விரும்பியது யூத குருக்கள் கூட்டம். அதற்காக இயேசுவின் உயிருக்கு உலை வைக்க அவர்கள் முடிவு செய்தனர். இயேசுவின் இரத்தத்தில் தங்கள் வாழ்வுக்கு வண்ணம் பூசிக்கொள்ள அவர்களுக்கு அவ்வளவு ஆசை. இயேசுவைத் தொலைத்துக் கட்டும் வரை தங்களுக்கு தூக்கம் இல்லை என்று தீர்மானித்து படைத்தவரையே பலியாக்க, வாழ்வு தந்தவரின் வாழ்வை எடுக்க வரிந்து கட்டிக்கொண்டு புறப்பட்டனர். தன்னைப் பிறருக்காக பலியாக்க விரும்பியது இயேசுவின் மனநிலை. தனக்காக பிறரை பலியாக்கிட விரும்பியது யூத குருக்களின் மனநிலை. நம் மனநிலை இயேசுவின் மனநிலையின் பிரதிபலிப்பாக வேண்டும். பிறர் வாழ்வு பெற நம்மைப் பலியாக்கிட முன்வரும் நல்மனம் நமக்குள் பிறக்க வேண்டும். வாழ்வதைவிட வாழ்விப்பதே வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும். ஆக நாமும் இயேசுவைப் போல பிறருக்காக பலியாக முன்வருவோம்.