பலவீனங்கள் எனும் பள்ளங்களை நிரப்பிடுவோம்!
யோவான் 13:21-33, 36-38
பள்ளங்களை நிரப்புவது மிக எளிது. ஆனால் பாதாளங்களை நிரப்புவது மிகக் கடினம். நம்முடைய பலவீனங்கள் பள்ளங்களாக இருக்கும் பொழுதே அவற்றை நாம் சரிசெய்துவிட வேண்டும். அப்படி செய்யத் தவறினால், நம்முடைய பலவீனங்கள் பாதாளங்களாக மாறிவிட்ட பின்பு, நாம் அவற்றைச் சரி செய்ய இயலாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம். ஆகவே நமது பலவீனங்கள் பள்ளங்களாக இருக்கும் பொழுதே நாம் அவற்றை இறையருள்கொண்டு நிரப்பிவிடுவோம். இல்லாவிட்டால் பள்ளங்கள் பாதாளங்களாய் மாறிப்போகும்.
இது ஒரு சிறிய பலவீனம்தானே, யாருக்குத்தான் இல்லை இந்த பலவீனம், பலவீனம் எல்லாம் ஒரு பெரிய குற்றம் ஒன்றும் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, நாம் பலவீனங்களில் சுகித்திருக்கத் தொடங்கினால், நம்முடைய பலவீனங்கள் பாவங்களாய் உருவெடுக்கும் பேரவலம் ஏற்படும். பலவீனங்கள் காலப்போக்கில் கண்டிப்பாக பாவங்களாக வடிவம் பெறத் தொடங்கும். பலவீனங்களை வெற்றி கொள்ளாமல் வாழ்வில் சாதனை சாத்தியமில்லை. நமது பலவீனங்களால் நம்முடைய பலம் மறைக்கப்படும். நம்முடைய பலவீனங்கள் நமது பலங்களைப் புதைத்துவிடும்.
பலவீனங்கள் எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பது இல்லை. அதே சமயத்தில் அப்பலவீனங்களை மனிதர்கள் கையாளும் விதமும் ஒன்றுபோல இருப்பதுமில்லை. இன்றைய நற்செய்தியில் இரு மனிதர்களின் பலவீனங்களை நம்மால் பார்க்க முடியும். ஒன்று யூதாசு இஸ்காரியோத்து. மற்றொன்று சீமோன் பேதுரு. யூதாசுக்கு ஒரு பலவீனம் இருந்தது. அது பணம் என்னும் பாதாளமாக இருந்தது என நற்செய்தி சொல்கிறது. பேதுருவுக்கும் ஒரு பலவீனம் இருந்தது. அது பயம் என்னும் பள்ளம் ஆக இருந்தது என நற்செய்தி சொல்கிறது. தன்னுடைய பலவீனத்தால் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்தான். தன்னுடைய பலவீனத்தால் பேதுரு இயேசுவை மறுதலித்தார். பணம் காட்டிக்கொடுக்கச் செய்தது. பயம் மறுதலிக்கச் செய்தது.
யூதாசு தன் பலவீனமாகிய பணம் எனும் பள்ளத்தை அறியவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதனால் அவன் அந்த பணம் எனும் பள்ளத்தை நிரப்பிட முடியாமல், பள்ளத்தை பாதாளமாக்கி இயேசுவைக் காட்டிக்கொடுத்து அதிலேயே விழுந்துவிட்டான். ஆனால் பேதுரு தன்னுடைய பலவீனமாகிய பயம் எனும் பள்ளத்தை அறிந்து, ஏற்றுக்கொண்டார். அதனால் அவர் இயேசுவை மறுதலித்து அந்த பயம் எனும் பள்ளத்தில் விழுந்தாலும் மீண்டும் எழுந்து, இறையருளால் அப்பள்ளத்தை நிரப்புவதில் வெற்றி கண்டார். வாழ்க்கையில் நமக்கும் பலவீனங்கள் உண்டு. யூதாசைப் போன்று நாம் ஒருபோதும் பள்ளங்களை பாதாளங்களாக்கிவிட வேண்டாம், பலவீனங்களை பாவங்களாக்கிவிட வேண்டாம். மாறாக நாம் பேதுருவைப் போல நம்முடைய பலவீனங்கள் எனும் பள்ளங்களை நிரப்பிடுவோம்!