பயம் விலகட்டும்! பக்தி ஓங்கட்டும்!
யோவான் 12:1-11
பொதுவாகவே நான் இதைச் செய்தால் பிறர் என்னை என்ன நினைப்பார்கள், நான் இப்படி நடந்துகொண்டால் பிறர் என்னைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பவை போன்ற எண்ண ஓட்டங்களே நம் வாழ்வுச் செயல்பாடுகளை அதிகம் கட்டுப்படுத்துகின்றன. ஆன்மீக காரியங்களில் இது இன்னும் கூடுதல் உண்மையாக இருக்கிறது. நம்மை இயக்கும் சாவியாக பிறர் நம்மைப் பற்றி கொண்டிருக்கும் எண்ணப்போக்கு ஒருபோதும் அமைந்துவிடக் கூடாது. நமது செயல்பாடுகள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கும் பட்சத்தில் பிறர் நினைப்பது பற்றி நாம் பயமோ பதட்டமோ அடைய அவசியம் இல்லை.
இன்றைய நற்செய்தியில் புனித வாரத்தின் திங்களில் இயேசுவின் வாழ்வின் நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆடம்பரமாய் வெற்றி பவனியாய் எருசலேம் நகருக்குள் முதல் நாள் நுழைந்த இயேசு, அடுத்த நாளே எருசலேம் ஆலயத்தை தூய்மை செய்கிறார். அதற்குப் பிறகு இயேசு பெத்தானியாவுக்குச் செல்கிறார். அங்குதான் இயேசு இறந்துபோன இலாசரை நான்கு நாள்களுக்குப் பிறகு உயிர்ப்பித்திருந்தார். இப்போது இலாசருடைய வீட்டில் இயேசுவுக்கு விருந்து பரிமாறப்படுகிறது. அச்சமயத்தில் இலாசரின் சகோதரி மரியா இலாமிச்சை நறுமணத் தைலத்தை இயேசுவின் காலடிகளில் ஊற்றி தன் கூந்தலால் துடைக்கத் தொடங்கினார். இச்செயல் யூதாசால் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. ஆனால் இயேசுவுக்கு அவளின் செயல் பிடித்திருந்தது.
எவர் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை. என் ஆண்டவராம் இயேசுவின் மீது நான் கொண்டிருக்கும் புனிதமான அன்பை எனக்கு தெரிந்த சிறிய வழியில் எப்படியும் வெளிப்படுத்தியே தீருவேன். அடுத்தவர் பார்த்து நகைத்தாலும், தடுத்தாலும் இயேசுவின் மீதான என் பவித்திரமான அன்பை வெளிப்படுத்தும் பரிசுத்தமான இச்செயலை எப்படியும் செய்தே தீருவேன் என்பதே மரியாவின் திண்ணமான முடிவு. எனவே தான் பொதுவெளியில் அத்தனை பேருக்கு முன்னால் அச்சம் அணுவளவுமின்றி அவள் அன்பால் இயக்கப்பட்டவளாய் ஆண்டவரின் பாதங்களை பக்தியோடு அர்ச்சனை செய்தாள். அதுவே நம் பக்தி முயற்சிகளின் முன்னோடி.
நாமும் நம் வாழ்வில் இயேசுவின் மீது கொண்டிருக்கும் அன்பை அடுத்தவர் முன்பாக அவையில் காட்டும் அசாத்திய துணிச்சல் நமக்கு இருக்கிறதா? அடுத்தவர் என்னவெல்லாம் நினைத்தாலும் அது பற்றி கவலை கொள்ளாமல், ஆண்டவர் மீதுள்ள நம்முடைய அன்பை வெளிப்படுத்தும் அன்பு நிறை பக்தி செயல்பாடுகளில் நம்மால் சமரசம் செய்யாமல் இருக்க முடியுமா? பொதுவெளிகளில் இயேசுவின் மீதான அன்பை செயலில் காட்டிட, பணம், மானம், மதிப்பு, மரியாதை, கௌரவம், சொத்து, உடைமை இவற்றை எல்லாம் இயேசுவின் மீது கொண்டுள்ள கள்ளமில்லா அந்த அன்பை வெளிப்படுத்துவதற்காக தியாகம் செய்யும் திராணி நமக்கு உண்டா? என்று நம்மையே கேட்டுப்பார்ப்போம். இனியாவாது மரியாவைப் போன்று நம்மிலும் பயம் விலகட்டும்! பக்தி ஓங்கட்டும்!