Wednesday, 19 May 2021

வணக்க மாதம் : நாள் -19

 பாதுகாப்பின் அன்னை

 (ஓவர்லூன் - ஹாலந்து)



இரண்டாம் உலகப் போரின் போது,  ஹாலந்தின் அர்ன்ஹெமுக்கு தெற்கே 30 மைல் தொலைவில் நிஜ்மெகனுக்கும் வென்லோவிற்கும் இடையில் நடுப்பகுதியில் அமைந்துள்ளஓவர்லூன் என்ற ஒரு சிறிய நகரத்தில் பாதுகாப்பின் அன்னை மரியா என்கிற தலைப்பு உருவானது.

ஜெர்மானியப் படைகள் ஹாலந்தைக் கைப்பற்றிய பின்னர், ஏராளமான இளம் டச்சுக்காரர்கள் ஜெர்மனியர்களால் கைது செய்யப்படுவதிலிருந்தும், கொல்லப்படுவதிலிருந்தும் தப்பிக்க ஓடி ஒளிந்தனர். அந்த இளைஞர்களில் பலர் ஓவர்லூனில் ஒரு மறைவிடத்தைக் கண்டுபிடித்தனர். ஓவர்லூனில் ஒரு மறைந்திருந்த அந்த அகதிகளில் பலர், மரியன்னை அவர்களை அங்கு பாதுகாப்பாய் இருப்பதற்கு உதவினால் அவர்கள் அன்னைக்கு ஓர் ஆலயத்தை அங்கு எழுப்புவதாக மரியன்னைக்கு வாக்குறுதியளித்தனர். 

ஓவர்லூனை விடுவிப்பதற்கான போரானது நேச நாட்டுப் படைகளுக்கும் ஜெர்மன் இராணுவத்திற்கும் இடையில் 1944 செப்டம்பர் 30 முதல் 18 அக்டோபர் வரை நடந்தது. பெரும் இழப்புகளைச் சந்தித்த பின்னர், போரின் விளைவாக ஓவர்லூன் நகரத்தை ஜெர்மன் தன் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தது. 

போர் முடிந்ததும், நாட்டில் அமைதி திரும்பி வந்ததும், ஓவர்லூனில் பதுங்கி இருந்த டச்சுக்கார இளைஞர்கள் நன்றியுணர்வோடு ஒன்று கூடி வாக்குறுதியளிக்கப்பட்டபடியே ஓர் ஆலயத்தை ஓவர்லூனில் கட்டி, அதை பாதுகாப்பின் அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்தனர். 

1945 ஆம் ஆண்டில், பிரபல சிற்பி பீட் வான் டோங்கன் மரியாவை சித்தரிக்கும் ஒரு சிறந்த படத்தை உருவாக்கினார். அதில் இரண்டு இளைஞர்கள் மரியன்னையின் அங்கியின் உள்ளே பாதுகாப்பாய் மறைந்திருக்கும்படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

திருவிழா நாள்:  ஜூலை 22

செபம்: பாதுகாப்பின் அன்னையே! எங்களுடைய வாழ்வில் அச்சுறுத்தல்களும், ஆபத்துக்களும் எங்களைச் சூழும் வேளைகளில் எல்லாம் நீரே எங்களுக்கு பாதுகாப்பாய் இருந்தருளும். ஆமென்.