மகிழ்ச்சியான செய்தியின் அன்னை
(பிரான்ஸ் - லெம்ப்ட்ஸ்)
டிசம்பர் 23, 1563 அன்று, லூகோனின் ஆயர் ஜான் பாப்டிஸ்ட் டியர்செலின் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கு இந்த ஆலயம் நேர்ந்தளிக்கப்பட்டது. ‘சீர்திருத்தத்தின்’ தலைவர்களால் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருந்த மதக் குழப்பங்களுக்கு மத்தியில் இந்த முதல் ஆலயம் ஏற்படுத்தப்பட்டது. பிரான்சில் நடைபெற்ற மதப் போர்களுக்கு மத்தியிலும் இத்திருத்தலத்திற்கான பக்தர்களின் வருகை தடையின்றி அதிகரிக்கவே செய்தது. ஒவ்வொரு ஆண்டும், குறிப்பாக குழந்தைகள் கன்னி மரியாவிடம் தங்கள் புதுநன்மைக்குப் பிறகு கிறிஸ்தவ நம்பிக்கையில் வேரூன்றும் வரம் கேட்டு இங்கு வருவது வழக்கமாயிருந்தது.
பிரான்சில் ஏற்பட்ட புரட்சிகர கொந்தளிப்பால் ஆலயம் கலை இழந்தது. அரசு ஆலய வழிபாடுகளை முடக்கியது. ஆனால் பயங்கரவாதத்தின் போதும் சிறைவாசம் மற்றும் மரண பயம் கூட கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களை அச்சுறுத்தவில்லை. 1793 ஆம் ஆண்டு வரையிலான சில திருமணங்கள் மற்றும் திருமுழுக்குகளின் பதிவேட்டில் இருந்து, திருமுழுக்கு மற்றும் திருமணங்கள் போன்றவை இரகசியமாக அங்கு நடத்தப்பட்டுள்ளது பெரும் வியப்பே. 1818 ஆம் ஆண்டில் ஒரு கடுமையான தொற்றுநோய் பிரான்ஸ் நாட்டை அழித்தது. கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் தங்கள் ஆயரின் அனுமதியுடன், மகிழ்ச்சியான செய்தியின் அன்னையின் திருத்தலத்திற்கு பவனியாகச் சென்று, கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்த திருவிழாவை அங்கு கொண்டாடுவதாக உறுதி எடுத்தனர். அவ்வாறே பவனியும் நடந்தது. கடவுள் விரைவில் தொற்றுநோயையும் முடிவுக்கு கொண்டுவந்தார்.
லெம்ப்ட்ஸ் பிரான்சின் ஏழ்மையான கிராமங்களில் ஒன்றாகும். அக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த, பொருளாதார நிலையில் மிகவும் ஏழையாக இருந்த ஒரு சிறுவன் மகிழ்ச்சியான செய்தியின் அன்னையின் ஆலயத்திற்கு தவறாமல் தினமும் வருகை தரத் தொடங்கினான். பிரெஞ்சுப் புரட்சிக்கு பிந்தைய பிரான்சின் சிதைவில் அவனுடைய வாழ்க்கையும் மிகவே போராடிக்கொண்டிருந்தது. அவன் கத்தோலிக்க நம்பிக்கையை அதிகமாக வைத்திருந்தான். வளர்ந்த பிறகு ஒரு கத்தோலிக்க குருவாகவும், நியூ மெக்ஸிகோவின் முதல் பேராயராகவும் அச்சிறுவன் மாறினான். அச்சிறுவனின் பெயர் ஜான் பாப்டிஸ்ட் லாமி.
திருவிழா நாள்: பிப்ரவரி 19
செபம்: மகிழ்ச்சியான செய்தியின் அன்னையே! எங்கள் கிறிஸ்தவ வாழ்வில் நாங்கள் நாள்தோறும் நம்பிக்கையில் வளர்ச்சியடையவும், அதன் பயனாக மகிழ்ச்சியின் செய்திகளைப் பெற்று இன்புற்றிருக்கவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.