Monday, 17 May 2021

வணக்க மாதம் : நாள் - 17

 அதிசயங்களின் அன்னை

(பிரான்ஸ் - பாரிஸ்)



பாரிஸின் புறநகரில் புனித நிக்கோலஸின் சிற்றாலயம் உள்ளது. இச்சிற்றாலயத்தின் முக்கிய ஈர்ப்பான அம்சம் யாதெனில் அதிசயங்களின் அன்னையின் சிலை ஆகும். 

பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள ஒரு துறவு மடத்திற்கு, ரூமால்ட் என்ற சிற்பி வேலை செய்யப் போகும் போது, அதிசயங்களின் அன்னையின் திருவுருவச் சிலை உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று துறவு மட ஆதீனத் தலைவர் ஒர்சினி எழுதியுள்ளார். 

11 ஆம் நூற்றாண்டில் பிரபு வம்சத்தை சார்ந்த குய்லூம் டி கோர்பீல் என்பவர் பிரான்சின் மன்னரான முதலாம் ஹென்றியிடம் மன்றாடி, அங்குள்ள துறவு மடம் ஒன்றின் பாதுகாவலர் உரிமையைப் பெற்றார். பின்பு ஒரு கட்டத்தில், அவருக்கு உடல்நலப் பிரச்சினைகளை உருவானபோது, அவர் குணமடைந்தால் வயதான பின்பு, அவர் அத்துறவு மடத்திலேயே ஒரு துறவியாக மாறுவார் என்று கன்னி மரியாவுக்கு உறுதியளித்தார். இதனால் அவர் விரைவாக குணமடைந்தார். பின்னர் அவர் வேண்டியபடியே அவர் அளித்த வாக்குறுதியைப் பின்பற்றி அத்துறவு மடத்தின் துறவியாகவும் மாறினார். 

ஒருமுறை துறவு மடத்தில் இயேசு மற்றும் மரியாவின் திருவுருவச் சிலைகள் பழுதுபார்க்கப்படாத நிலையில் இருப்பதை உணர்ந்த அவர், அச்சிலைகளை சரிசெய்ய ரூமால்ட் என்ற சிற்பியை ஏற்பாடு செய்தார். ஜூலை 10, 1068 இல் ரூமால்ட்; தனது வேலையைத் தொடங்கியபோது, துறவு மடத்துக்கு வெளியில் இருந்து ஒரு குரல் கேட்டது. அவர் வெளியே சென்றபோது அங்கு யாரும் இல்லை. பின்பு அவர் மீண்டும் உள்ளே சென்றபோது அங்கிருந்த மரியாவின் சிலை முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

பிரெஞ்சுப் புரட்சியின்போது ஒட்டுமொத்த துறவு மடமும் அழிக்கப்பட்டாலும், அதிசயங்களின் அன்னையின் சிலை மட்டும் அற்புதவிதமாக எவ்வித சேதமுமின்றி தப்பியது. இந்த சிலை உருவாக்கப்பட்ட அதிசய விதத்தின் காரணமாக 1328 ஆம் ஆண்டு முதல் இச்சிலை வணங்கப்பட்டது. இது இப்போது அதிசயங்களின் அன்னை துறவு மடத்தில் உள்ள புனித நிக்கோலஸ் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.



திருவிழா நாள்: மார்ச் 12

செபம்: அதிசயங்களின் அன்னையே! எங்கள் வாழ்வில் எதிர்பாராத அற்புதங்களையும் அதிசயங்களையும் நாங்களும் பெற்றுக் கொள்ளவும், அதனால் என்றும் உம் திருமகன் இயேசுவுக்கு உரியவர்களாய் வாழவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.