Sunday, 16 May 2021

வணக்க மாதம் : நாள் - 16

 வில்லின் அன்னை

(இங்கிலாந்து - இலண்டன்)


இலண்டனில் உள்ள வில்லின் அன்னையின் திருத்தலம் ஒரு வினோதமான வரலாற்றுப் பாரம்பரியக் கதையைக் கொண்டது. 1071 ஆம் ஆண்டில் கன்னி மரியாவின் உருவம் ஒரு புயலால் 600 க்கும் மேற்பட்ட வீடுகளுடன் எடுத்துச் செல்லப்பட்டது என்பதே அப்பாரம்பரியச் செய்தியாகும். 

தற்போது இலண்டனில் வில்லின் அன்னை மரியா என்ற பெயரில் ஓர் ஆலயம் உள்ளது. இது சுமார் 1080 இல் கேன்டர்பரி பேராயரால் கட்டப்பட்டது. இது ஒரு நார்மன் திரு அவை ஆலயம். இதன் முந்தைய தோற்றமான சாக்சன் கட்டமைப்பானது 1071 இல் புயலில் அழிக்கப்பட்டிருக்கலாம்.

12 ஆம் நூற்றாண்டின் நாளேட்டின் அடிப்படையில் 1091 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் இலண்டன் நகரில் ஒரு பயங்கர புயல் ஏற்பட்டது என்பது உறுதியாகிறது. இது துறவுமட ஆதீனத் தலைவர் ஒர்சினியால் குறிப்பிடப்பட்ட உண்மையான தேதியாக இருக்க கூடும். ஏனெனில் தெற்கில் இருந்து ஒரு பெரிய காற்று மற்றும் ஒரு சூறாவளி இருந்தது என்றும், அது இரண்டு பேரைக் கொன்றதாகவும் மற்றும் ஆலயத்தின் கூரையையும் உத்திரத்தையும் மிக உயரமாக உயர்த்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வாறு உயர்த்தப்பட்ட உத்திரங்கள் பூமிக்குள் மிக ஆழமாக செலுத்தப்பட்டதால், கிட்டத்தட்ட 30 அடி நீளம் கொண்ட அவற்றின் ஏழாவது அல்லது எட்டாவது பகுதி மட்டுமே பூமிக்கு வெளியே தெரியும்படி இருந்தன. இந்த உத்திரங்களை தரையில் இருந்து வெளியே இழுக்க முடியாத நிலையில், அவை தரை மட்டத்தில் வெட்டப்பட்டு விடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு வில்லின் அன்னை ஆலயம் அதன் பெயரை இந்த அசாதாரண நார்மன் வளைவுகள் அல்லது வில்லில் அமைப்புகளிலிருந்து பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இவை ஒரு புதுமையாகக் கருதப்பட்டன. இன்றைய ஆலயம் பழைய கட்டமைப்புக்கு மேலேயே கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இது இப்போது ஆங்கிலிக்கன் திரு அவைக்குரிய ஓர் ஆலயம்.

திருவிழா நாள்: ஆகஸ்ட் 3

செபம்: வில்லின் அன்னையே! புயல் சூழ்ந்த எங்கள் வாழ்வுப் பாதையில் உம் திருமகன் இயேசுவிடம் எங்களை பாதுகாப்பாய் அழைத்துச் செல்ல நீர் எங்களுக்கு வழித்துணையாய் வந்தருளும். ஆமென்.