வயல்களின் அன்னை
(பிரான்ஸ் - பாரிஸ்)
வயல்களின் அன்னை கன்னி மரியா மீதான பக்தி முயற்சியானது நம்மை பிரான்சின் கத்தோலிக்க வாழ்க்கை முறையின் ஆரம்ப நாட்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.
பாரிஸில் உள்ள இன்றைய வயல்களின் அன்னையின் ஆலயம் பண்டைய காலங்களில் பிற தெய்வமாகிய சீரசுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. புனித டெனிஸ் பாரிஸின் முதல் ஆயர் ஆவார். கன்னி மரியா மீதான பக்திக்கு பாரிஸ் நகரம் அவருக்கே கடன்பட்டிருக்கிறது.
பாரம்பரியத்தின் படி, வேளாண்மையின் தெய்வமான சீரஸ் கோவிலில் இருந்து புனித டெனிஸ் பேய்களை விரட்டியடித்தார். மேலும் அந்த ஆலயத்தில் புனித லூக்காவின் புகழ்பெற்ற ஓவியத்தின் மாதிரியாக அமையப்பெற்ற மரியன்னையின் திருவுருவத்தை வைத்தார். இவ்வாறு இந்த ஆலயம் அது முதல் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக மாறியது.
‘ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியா எளிமையான அழகும், அணுகக்கூடிய ஒரு பெண்ணும் ஆவார். அவள் எப்போதும் நம்மைத் தம் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவிடம் மிகவும் நெருக்கமாக அழைத்துச் செல்கிறாள். அவள் தாழ்மையானவள், புனிதமானவள். அவளுடைய எளிய அழகு விண்ணக அரசுக்கு மாண்பு தருகிறது. ஏனென்றால் அவள் நம்முடைய தாய்.’
புனித டெனிஸ் இதை நன்கு அறிந்திருந்தார். இதனால் பிற தெய்வ வழிபாடு நடைபெற்ற, குறிப்பாக வேளாண்மைக்கான அந்நிய தெய்வத்தின் இடத்தில் அவர் அன்னை மரியாவை அச்சிறப்பான கோவிலில் வைத்தார். பாரிஸ் நகர மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை அன்னை மரியாவை வயல்களின் அன்னை என்று பக்தியோடும், பாசத்தோடும் வணங்கி மகிழ்கின்றனர்.
திருவிழா நாள்: பிப்ரவரி 26
செபம்: வயல்களின் அன்னையே! நல் விளைச்சலுக்கும், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமானவளே! எங்கள் வாழ்வெனும் விளை நிலத்தில் நாங்களும் உம்மைப் போலவே உம் அன்பு மகன் இயேசுவை விதைத்து, இறையருளை அறுவடை செய்திட உதவி செய்யும். ஆமென்.