மலைகளின் அன்னை
(இத்தாலி - லோம்பார்டி)
இத்தாலியின் லோம்பார்டியில் உள்ள வரீஸில் உள்ள புனித மலையின் வரலாறு, நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிலன் நகர ஆயரான புனித அம்புரோசுக்கு மரியன்னை தோன்றியதை நினைவுகூரும் வகையில் அங்கு கட்டப்பட்ட ஓர் ஆலயத்தில் இருந்து தொடங்குவதாகக் கூறப்படுகிறது.
புனித அம்புரோஸ் ஓர் ஆயராகவும், திரு அவையின் தொடக்க காலத் தந்தையருள் ஒருவராகவும், அவருடைய சம காலத்தில் பழக்கத்தில் இருந்த ஆரியத் தப்பறைக் கொள்கைக்கு எதிராக மிகவும் கடுமையாகப் போதித்தார்.
புனித அம்புரோஸ் கடவுளின் தாயான மரியாவின் சிறந்த பக்தராகவும், ஆதரவாளராகவும் இருந்தார். ஆரியத் தப்பறைக் கொள்கையுடனான மோதலின் போது ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியா ஆயரான புனித அம்புரோசுக்கு தோன்றினார் என்றும், புனித அம்புரோஸ் கடவுளின் தாயின் வேண்டுகோளின் பேரில் அவருக்கு காட்சி அளித்த அந்த இடத்தில் மலைகளின் அன்னையின் ஆலயத்தைக் கட்டியதாகவும் நம்பப்படுகிறது,
இந்த புனித மலையானது குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டில் அகுஸ்தீனிய கன்னியர்களின் துறவு மடம் அப்பகுதியில் நிறுவப்பட்ட பின்னர் மிகவும் பிரபலமடைந்தது.
பண்டைய காலங்களில் இந்த மலை பிற தெய்வங்களின் வழிபாட்டில் வெற்றியின் பெண் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பகுதி மலைகளின் அன்னை மரியாவின் பெயரால் இப்போது வரீஸின் புனித மலை என்று அழைக்கப்படுகிறது, மேலும் 1604 மற்றும் 1623 ஆண்டுகளுக்கு இடையில் மொத்தம் பதினான்கு சிற்றாலயங்கள் இம்மலையில் கட்டப்பட்டுள்ளன.
திருவிழா நாள்: ஜூன் 4
செபம்: மலைகளின் அன்னையே! உண்மையை அறிந்துகொள்ளவும், உண்மையையே வாழ்வாக்கவும் உயர்ந்த மலையில் காட்சி தந்து கற்பித்தீரே. நாங்களும் எங்கள் வாழ்க்கையில் உண்மையை அறியவும், வாழ்ந்திடவும் உண்மைக் கடவுளின் பக்கம் எங்களை கொண்டு சேர்த்தருளும். ஆமென்.