Thursday, 13 May 2021

வணக்க மாதம்: நாள் -13

 வனங்களின் அன்னை

(இத்தாலி - கல்லோரோ)



1621 ஆம் ஆண்டில் கல்லோரோவில் அனாதையாக இருந்த சாந்தி பெவிலாக்வா என்ற சிறு பையன் தன் மாமாவுடன் வசித்து வந்தான். ஆடுகளைப் மேய்ப்பதற்காக சாந்தி பெவிலாக்வா காட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தான். அவ்வாறு சென்ற சாந்தி பெவிலாக்வா பெர்ரி பழங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு புதருக்குள் தடுமாறி விழுந்தான். 

பின்பு மீண்டும் தன்னைச் சரிசெய்து அவன் எழுந்தபோது, அங்கே ஒரு சிறிய ஓட்டின் மீது வரையப்பட்டிருந்த மரியாவின் திருப்படத்தைப் பார்த்தான். மிகவும் பக்தியுள்ள ஒரு சிறுவனாக இருந்ததால், அவன் மண்டியிட்டு அங்கேயே செபிக்கத் தொடங்கினான். பின்னர், அடுத்த நாள் அவன் கையில் பூச்செண்டுடன் அந்த இடத்திற்கு திரும்பி வந்தான். விரைவில் அவனது நண்பர்கள் பலரும் அவனுடன் காட்டில் உள்ள மரியாவுக்கு வணக்கம் செலுத்த வந்தனர். அவர்களும் பூக்களைக் கொண்டுவந்து தூவி, மரியாவின் புகழ் பாடல்களைப் பாடினார்கள். இது அண்டை வீட்டாருக்கு அறவே பிடிக்கவில்லை, அவர்கள் பல குழந்தைகள் அப்பக்கம் கடந்து செல்வதால் தங்கள் பெர்ரி பழங்கள் திருடுபோகுமோ என்று அஞ்சினர். இறுதியாக, குழந்தைகள் தாங்களே ஒரு பாதையை உருவாக்குவது பற்றி யோசித்து, விவேகமின்றி புதருக்கு தீ வைத்தனர். அத்தீ மிகவே பரவியது. இதனால் அவர்கள் காடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

சில நாள்களுக்குப் பின்பு, சாந்தி தனது மாமாவின் தச்சு கடையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஒரு மூலையில் மரக்கட்டைகளின் அருகே தூங்கிவிட்டான். அவன் தூங்கும்போது மரம் வெட்டும் துண்டு அவர் மீது விழுந்தது. அவன் வனங்களின் அன்னையைத் தன்னைக் காப்பாற்றும்படி அழைத்து கத்தியபடியே விழித்தான். பயந்துபோன அவனது மாமா, மரக்கட்டைகளை அகற்றி, சிறுவனை காயமடையாமல் கண்டுபிடித்து, அவரை யார் காப்பாற்றினார் என்று தெரிந்துகொள்ளும்படி அவனைக் கேட்டார். அச்சிறுவனும் கல்லோரோவில் வனங்களின் அன்னை பற்றி சொன்னான். பின்பு பல தடைகளுக்குப் பின்பு சாந்தி பெவிலாக்வாவின் மாமாவின் பெரும் முயற்சியால், அங்கே வனங்களின் அன்னைக்கு ஓர் ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது. 

திருவிழா நாள்: செப்டம்பர் 5

செபம்: வனங்களின் அன்னையே! இயற்கையின் எழிலில் நீர் உம்மை எங்களுக்கு எப்போதும் வெளிப்படுத்துகிறீர். எம் வாழ்வும் வனங்களைப் போல் அழகும் எழிலும் பசுமையும் செழுமையும் நிறைந்ததாய் மாறிட எங்களுக்கு நீர் உதவி செய்யும். ஆமென்.