Friday, 21 May 2021

வணக்க மாதம் : நாள் - 21

 வெட்டுக்கிளிகளின் அன்னை

(கோல்ட் ஸ்பிரிங் - மினசோட்டா)



முதன்முதலில் இவ்வாலயம் கட்டப்பட்டபோது, அது மரியாவின் சகாயம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இப்போது, இது அதிகாரப்பூர்வமாக விண்ணேற்பு அன்னைக்கு நேர்ந்தளிக்கப்பட்ட ஆலயமாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் அது தனது பழைய புனைப்பெயரான வெட்டுக்கிளிகளின் அன்னை ஆலயம் என்பதனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மரியா இங்கு வெட்டுக்கிளிகளின் அன்னை என்று வணங்கப்படுகிறார்.

மினசோட்டா என்ற பகுதியில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட பயங்கரமான பிளேக் ஜூன் 1873 நடுப்பகுதியில் தொடங்கியது. தென்மேற்கு மினசோட்டாவில் உள்ள விவசாயிகள் மேற்கிலிருந்து ஓர் இருண்ட புயல் மேகம் போல் நகர்வதைப் பார்த்தார்கள். ஆனால் அது மழை தாங்கும் மேகம் அல்ல. இது மில்லியன் கணக்கான வெறித்தனமான மலை வெட்டுக்கிளிகளின் மேகமாக இருந்தது. வெட்டுக்கிளிகள் எல்லா பயிர்களையும் அழித்தன. 

இது உள்;ர் விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. இது பல ஆண்டுகளாக நீடித்தது.  இறுதியில் மினசோட்டாவின் ஆளுநர் ஜான் எஸ். பில்ஸ்பரி, 1877 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதியை வெட்டுக்கிளிகளிடமிருந்து கடவுளின் விடுதலையைக் கேட்கும் பிரார்த்தனை நாளாக அறிவித்தார். 

அச்சமயத்தில் லியோ வின்டர் என்ற குரு கோல்ட் ஸ்பிரிங் என்ற இடத்திலுள்ள தம் பங்கு மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதன்படி அவர்கள் கன்னி மரியாவுக்கு ஒரு நேர்ச்சை சிற்றாலயம் எழுப்புவதாகவும், அங்கு மரியாவின் வணக்க நாளான சனிக்கிழமைகளில் திருப்பலியை நிறைவேற்றி, வெட்டுக்கிளிகளின் தொல்லை நீங்க அன்னையின் பரிந்துரையை நாடி, அவளிடம் அடைக்கலம் புகவும் அவர் தன் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

ஜூலை 16, 1877 அன்று மக்கள் இதற்கு ஒப்புக் கொண்டனர். ஆகஸ்ட் 15, 1877 அன்று இச்சிற்றாலயம் புனிதப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 8 ஆம் தேதி, வெட்டுக்கிளிகளின் தொந்தரவு அப்பகுதியில் முழுவதும் இல்லாமல் போய்விட்டது. அதன்பிறகு ஒரு தீவிர வெட்டுக்கிளி படையெடுப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

திருவிழா நாள்: ஆகஸ்ட் 15

செபம்: வெட்டுக்கிளிகளின் அன்னையே! வாழ்வில் எங்களை வருத்தத்திலும், வேதனையிலும் ஆழ்த்துகின்ற, எல்லா விதமான நெருக்கடியான நேரங்களிலும் நீரே எங்களுக்கு ஆறுதலும் ஆதரவுமாக இருந்தருளும். ஆமென்.