Saturday, 22 May 2021

வணக்க மாதம் : நாள் - 22

 நல்லாலோசனையின் அன்னை

(ஜெனாசானோ - இத்தாலி)



நல்லாலோசனையின் அன்னையின் அசல் ஓவியத்தை உள்ளடக்கிய திருத்தலம் உரோம் நகருக்கு தென்கிழக்கில் சுமார் முப்பது மைல் தொலைவில் உள்ள ஜெனாசானோ என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ளது. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஜெனாசானோவிலிருந்த மக்கள் கன்னி மரியாவுக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தனர். எனவே அவர்கள் நல்லாலோசனையின் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆலயத்தை கட்டினார்கள். இந்த தேவாலயம் 1356 இல் அகுஸ்தீன் துறவற சபை குருக்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டது. நாளடைவில் அக்கோவில் பழுதடைந்தது. பெட்ரூசியா டி ஜெனியோ என்ற கைம்பெண் தனது சேமிப்பை வைத்து அதனைப் புதுப்பிக்க முன்வந்தார். தனது சேமிப்பு அனைத்தையும் அப்பணிக்காக அவர் செலவிட்டும், அவரால் ஆலயம் முழுவதையும் புதுப்பிக்க முடியவில்லை. 

1467ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியன்று அந்நகர மக்கள் அனைவரும் சேர்ந்து தங்கள் நகரின் பாதுகாவலரான புனித மாற்குவின் விழாவை வெகு ஆடம்பரமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அன்று மாலை 4 மணியளவில், மக்களை ஆடல்பாடல்களால் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் மிக நேர்த்தியான இசையைக் கேட்டனர். பின்னர் அனைவரும் அமைதியாக அந்த இசை வந்த திசை நோக்கி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்மமான மேகம் வானத்திலிருந்து இறங்கி வந்து அந்த ஆலயத்தில் முடிக்கப்படாத சுவரில் இறங்கியது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அந்த மேகம் மறைந்தது. ஆனால் அவ்விடத்தில் அன்னை மரியாவையும் குழந்தை இயேசுவையும் கொண்ட ஓர் ஓவியம் தெரிந்தது. இந்த ஓவியம் முடிக்கப்படாத அந்த ஆலயச் சுவரில் இருந்தது. உடனடியாக ஆலய மணிகள் தானாகவே ஒலித்தன. 

இப்புதுமைச் செய்தி இத்தாலி முழுவதும் பரவியது. பலருக்குப் புதுமைகள் நடந்தன. முக்கியமான புதுமைகளைப் பதிவுசெய்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டார். 1939ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பத்திநாதர் தனது பாப்பிறைப் பதவிக்காலத்தை நல்லாலோசனை அன்னையின் பாதுகாவலில் அர்ப்பணித்தார். தற்போதைய திருத்தலமானது 1628 இல் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரில், இத்திருத்தலத்தில் ஒரு குண்டு விழுந்து, தூயகத்தையும், பலிபீடத்தையும் சிதைத்தது. ஆனால் சற்று தொலைவில் இருந்த உடையக்கூடிய நல்லாலோசனையின் அன்னையின் படம்  சிறிதும் சேதமடையவில்லை.

திருவிழா நாள்: ஏப்ரல் 26

செபம்: நல்லாலோசனையின் அன்னையே! குழப்பங்களாலும், சிக்கல்களாலும் நாங்கள் சிரமப்படும் நேரங்களில் எங்களுக்கு நீரே நல்லாலோசனை தந்து உதவியருளும். ஆமென்.