Sunday, 23 May 2021

வணக்க மாதம் : நாள் - 23

 தைரியத்தின் அன்னை

(அம்ப்ரியா, இத்தாலி)



இத்தாலிய சிறந்த ஓவியர் கார்லோ மராட்டா என்பவரால் (1625-1713) இப்படம் வரையப்பட்டது. இவர் இந்த ஓவியத்தை ஓர் இளம் பெண்ணுக்குக் கொடுத்ததாகவும், பின்னர் அப்பெண் டோடி நகரில் உள்ள புனித பிரான்சிஸின் ஏழை கிளாரா துறவு மடத்தின் தலைவியாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. அவர்தான் வணக்கத்திற்குரிய அருள்சகோதரி கிளாரா இசபெல் ஃபோர்னாரி. இவர் கடுமையான தவ வாழ்க்கை வாழ்ந்தவர். இயேசுவின் ஐந்து திருக்காய வரத்தையும் பெற்றிருந்தார். அருள்சகோதரி கிளாரா இசபெல் மற்ற எல்லா புனிதர்களையும் போலவே, அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மேலும் மிகவும் சிறப்பு வாய்ந்த மரியாவின் இத் திருப்படத்தை பக்தியோடு வணங்கும் யாவருக்கும் சிறப்பு அருட்கொடைகளை வழங்குவதாக அருள்சகோதரி கிளாரா இசபெல்லுக்கு அன்னை வாக்குறுதியை அளித்திருந்தார்.  

தைரியத்தின் அன்னையின் பரிந்துரையின் மூலம் நடைபெற்ற பல அற்புதங்கள் காரணமாக, இத்திருவுருவப் படத்தின் பிரதிகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இந்த நகல்களில் ஒன்று உரோமில் உள்ள லாத்தரன் பசிலிக்காவில் இருக்கும் புனித மரியா குருமடத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டது. இங்கு குருமாணவர்கள் மற்றும் குருக்களின் பிரார்த்தனைகள் மற்றும் தேவைகள் எப்போதும் அன்னையால் கேட்கப்படுவதை அவர்கள் விரைவில் உணர்ந்தனர்.

1837 ஆம் ஆண்டில் உரோமில் பல உயிர்களைக் கொன்ற ஆசிய காய்ச்சலின் போது அவர்களை அன்னை பாதுகாத்தார். மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு. முதலாம் உலகப் போரின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட குரு மாணவர்கள் இத்தாலியின் ஆயுதப் பணிகளில் கட்டாயப்படுத்தப்பட்டபோது, புனித மரியா குருமட மாணவர்கள் தங்களை அன்னையின் சிறப்பு பாதுகாப்பின் கீழ் வைத்து, போருக்குச் சென்றார்கள். போருக்குப் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக திரும்பினர். தங்கள் நன்றியின் அடையாளமாக குரு மாணவர்கள் மரியன்னை மற்றும் குழந்தை இயேசு இருவருக்கும் தங்கத்தால் மணிமுடி சூட்டினர்.

இத்திருவுருவப் படம் தைரியத்தை வளர்க்கிறது மற்றும் ஊக்குவிக்கிறது. ஏனென்றால் படத்தில் குழந்தை இயேசு தன் தாயின் கைகளில் மிகவும் தைரியமாக அமர்ந்திருப்பதை பார்க்க முடியும். ஒரு ஆச்சரியமான சைகையுடன், குழந்தை இயேசு தனது தாயைச் சுட்டிக்காட்டுகிறார். அது சொல்லும் அர்த்தமாவது: ‘நீங்கள் என்னிடம் வந்தால், அவளிடம் செல்லுங்கள். அவள் என்னைக் கேட்கிறாள், நான் அவளுக்குக் கொடுப்பேன்.’

திருவிழா நாள்: பிப்ரவரி 9

செபம்: தைரியத்தின் அன்னையே! எம் வாழ்வில் பயமும் பதட்டமும் என்னை அலைக்கழிக்கும்போது உம் அரவணைப்பில் நானும் தைரியமும் துணிவும் பெற்றிட எனக்கு உதவி செய்யும். ஆமென்.