Monday, 24 May 2021

வணக்க மாதம் : நாள் -24

 வானதூதர்களின் அன்னை

(ஆர்கோலா, இத்தாலி) 


ஆர்கோலா கிராமத்தில் கன்னி மரியாவின் அதிசயமான தோற்றம் நடந்த இடத்தில் வானதூதர்களின் அன்னை ஆலயம் கட்டப்பட்டுள்ளது.  21 மே 1556 அன்று, அந்த ஆண்டில், அது பெந்தெகொஸ்தே நாளின் இரண்டாவது நாள். திருப்பலிக்குப் பிறகு, கார்பனாராவில் இருந்த தங்கள் பண்ணையில் பார்பரா, கமிலா, எலிசபெட்டா, கேடரினெட்டா மற்றும் ஏஞ்சலா, ஆகிய ஐந்து சகோதரிகளும் அவர்கள் பெற்றோர் மற்றும் சகோதரர்களும் செபமாலை செபிக்கையில், ஒரு உன்னதமான பெண்மணி ஒருவர் ரோஸ்மேரி புதருக்கு மேலே தோன்றினார்.  சூரியனை விட பிரகாசமாக அவர் இருந்தார். வெள்ளை உடை அணிந்திருந்தார். இரண்டு வானதூதர்களால் சூழப்பட்டிருந்தார். அப்பெண்மணி தனது கையை உயர்த்தி, இனிமையான குரலில் அவர்களிடம், ‘அன்பர்களே, போய், அனைவரையும் செபிக்கவும், தவம் செய்யவும்  சொல்லுங்கள். நல்ல கிராமவாசிகளிடம் எனக்கு இந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டும்படி சொல்லுங்கள்’ என்றார். 

அப்பெண் மேல்நோக்கி ஆகாயம் வரை உயர்ந்து, அவளுடைய வானதூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் பார்வையில் இருந்து மெதுவாக மறைந்தார். அவர்கள் விண்ணக ஆறுதலாலும் நம்பிக்கையாலும் நிறைந்திருந்தனர். அவர்கள் அக்காட்சியில் இருந்து மீண்டவர்களாய், ஆச்சரியத்தில் திகைத்து நின்றார்கள். அவசரமாக தங்கள் வீட்டை அடைந்து தாங்கள் கண்ட காட்சியைப் பற்றி தங்கள் அன்புக்குரியவர்களிடமும் பங்குத்தந்தையிடமும் பரவசமாய் எடுத்துக் கூறினார்கள். இதைக் கேட்ட கிராமவாசிகளுக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி பிறந்தது. அனைவரின் ஆன்மாவிலும் ஓர் உறுதியான நம்பிக்கை எழுந்தது. விரைவில் இச்செய்தி அண்டை மற்றும் தொலைதூர நகரங்கள் மற்றும் அதற்கு அப்பாலும் சென்று சேருகிறது. மரியன்னையின் மீது பக்தியும் அன்பும் கொண்டிருந்த பலர் கார்போனாராவுக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு அவர்கள் ஆறுதலையும், உண்மையான அமைதியையும், ஒரு வகையான உள் புதுப்பிப்பையும் உணர்ந்தனர். 

1558 ஆம் ஆண்டில், இப்போது இருக்கும் தரையின் கீழ்த்தள ஆலயம் அன்னை தோன்றிய புனித இடத்தில் கட்டப்பட்டது. பலிபீடத்தின் இரு பக்கங்களில் உள்ள சுவர்களில் ஓவியர் லூய்கி அக்ரெட்டி வரைந்த இரண்டு பெரிய ஓவியங்கள் உள்ளன. ஒன்று வானதூதர்களின் அன்னையின் அதிசயமான காட்சியைப் பற்றியது. மற்றொன்று மே 16, 1910 இல் நடந்த வானதூதர்களின் அன்னைக்கான புனிதமான மணிமுடிசூட்டலைப் பற்றியது. 

திருவிழா நாள்: மே 21

செபம்: வானதூதர்களின் அன்னையே! மங்கும் மண்ணக மனிமையை நாடாமல் விண்ணுக்குரிய மகிமையையும், மாட்சியையும் நாங்கள் நாடித் தேட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.