Wednesday, 26 May 2021

வணக்க மாதம் : நாள் -26

எதிர்நோக்கின் அன்னை

(போன்ட்மைன் - பிரான்ஸ்)


1871 இல் பிரான்ஸ் மற்றும் பிரஷ்ய நாடுகளுக்கிடையிலான போரினால் பிரான்ஸ் பேரழிவிற்கு உட்பட்டது. பிரான்சின் பெரும்பகுதி பிரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. இப்பின்னணியில் சுமார் 500 மக்களைக் கொண்ட ஒரு குக்கிராமமான போன்ட்மைன் என்னும் இடத்தில் அன்னையின் காட்சி நடந்தது. பார்பெடெட் என்ற குடும்பத்தில் தந்தை சீசர், அவரது மனைவி விக்டோயர், அவர்களது இரண்டு மகன்களான ஜோசப் (10 வயது) மற்றும் யூஜின் (12 வயது) மற்றும் இராணுவத்தில் இருந்த மற்றொருவன் ஆகியோர் இருந்தனர். 1871 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மாலை, இரண்டு சிறுவர்களும் கொட்டகையில் தங்கள் தந்தைக்கு உதவி செய்துகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வானத்தைப் பார்த்தபோது, திடீரென்று ஓர் அழகான பெண்மணி அவர்களைப் பார்த்து சிரிப்பதைக் கண்டார்கள். அவர் தங்க நட்சத்திரங்களால் மூடப்பட்ட நீல நிற அங்கியையும், தலையில் தங்க கிரீடத்தின் கீழ் ஒரு கருப்பு முக்காடும் அணிந்திருந்தார். அங்கிருந்த பெரியவர்களால் எதையும் காண இயலவில்லை. ஆனால் மேலும் இரு சிறுமிகளான பிராங்கோயிஸ் ரிச்சர் (11 வயது) மற்றும் ஜீன் மேரி லெபோஸ் (9 வயது) ஆகியோரும் அவளை வானத்தில் பார்த்தார்கள்.

இருப்பினும், பெரியவர்கள் மூன்று நட்சத்திரங்களாலான ஒரு முக்கோணத்தை மட்டுமே பார்த்தார்கள். அவர்கள் செபமாலையை செபிக்கையில், அன்னையின் ஆடையிலிருந்த தங்க நட்சத்திரங்கள் பெருகுவதைக் குழந்தைகள் கண்டார்கள். அடுத்து, அன்னையின் காலடியில் ஒரு பதாகையில் இருந்த, ‘என் பிள்ளைகளே, செபியுங்கள். கடவுள் இன்னும் சிறிது காலத்திலேயே உங்கள் குரலுக்கு செவிமடுப்பார். கனிவிரக்கத்தால் என் மகனின் மனம் நெகிழ்ந்துள்ளது.’ என்ற செய்தியை வாசித்தார்கள். சத்தமாக வாசிக்கப்பட்ட இச்செய்தியைக் கேட்டதும், கூட்டம் தன்னிச்சையாக ‘எதிர்நோக்கின் தாய்’ என்ற பாடலைத் தொடங்கியது. மேலும் ஒரு சிவப்பு சிலுவை அவரது கைகளில் தோன்றியது. அதன் மேலே ‘இயேசு கிறிஸ்து’ என்ற வார்த்தைகள் இருந்தன. இத்தோற்றம் ஏறக்குறைய மூன்று மணி நேரம் நீடித்தது.

பதினொரு நாட்களுக்குள், பிரஷ்யா தனது படைகளைத் திரும்பப் பெற்றது. ஒரு போர் ஒப்பந்தம் கையெழுத்தானது மற்றும் போர் முடிந்தது. போன்ட்மெயினும் பிரான்சும் காப்பாற்றப்பட்டன. ஒரு வருடத்திற்குள், லாவல் மறைமாவட்டத்தின் ஆயர் வைகார்ட் இந்த காட்சிக்கு அங்கீகாரம் அளித்தார். 

திருவிழா நாள்: ஜனவரி 17 

செபம்: எதிர்நோக்கின் அன்னையே! எங்கள் எதிரிகள் பெருகும் போதும், அச்சம் ஆக்கிரமிக்கும்போதும், நீரே எங்களுக்கு உதவிட விரைந்து வாரும். ஆமென்.