செபத்தின் அன்னை
(லியா புட்சார்ட் - பிரான்ஸ்)
டிசம்பர் 8, 1947 அன்று பிரான்சின் மையப்பகுதியிலுள்ள லியா புட்சார்ட் என்னும் ஒரு சிறிய கிராமத்தில், ஜாக்குலின் ஆப்ரி (12 வயது), அவரது சகோதரி ஜீனெட் ஆப்ரி (7 வயது), அவர்களது உறவினர் நிக்கோல் ராபின் (10 வயது) மற்றும் அவர்களது அண்டை வீட்டார் லாரா குரோய்சன் (8 வயது) மதிய உணவுக்காக பள்ளியிலிருந்து வெளியே வந்தார்கள். அன்று அருள் சகோதரிகள் பிரான்ஸ் பயங்கர ஆபத்தில் இருப்பதாக கூறியிருந்ததால், 4 சிறுமிகளும் தங்கள் நாட்டிற்காக செபமாலையின் ஒரு பத்து மணிகளை செபிக்க கிராம ஆலயத்தில் நின்று, ஏறக்குறைய 5 அல்லது 6 மணிகளை மட்டுமே செபித்திருந்தபோது, வெண்நிற அங்கியை அணிந்தவாறு மரியா காட்சி தந்தார். அவருடைய கைகள் செபத்திற்காக இணைந்திருந்தன. வலது கையின் மேற்பகுதியில் செபமாலை இருந்தது. இடதுபுறத்தில் ஒரு வானதூதர் மரியாவை உற்றுநோக்கி தியானித்த நிலையில், வலது கையை மார்பில் வைத்து, இடது கையில் ஒரு லில்லி மலரை வைத்திருந்தார்.
மென்மையாக இவ்வாறு பேசினார்: ‘பிரான்சிற்காக செபம் செய்ய சிறுகுழந்தைகளிடம் சொல்லுங்கள்’. பின்னர் அவர், ‘முத்தமிட உங்கள் கைகளை எனக்குக் கொடுங்கள்’ என்று சொல்லி, அவர்களிடம் தன் கையை நீட்டினார். அவர் ஒவ்வொருவரின் கைகளின் பின்புறத்தில் முத்தமிட்டு, அவர்களிடம், ‘இன்று மாலை 5 மணிக்கும், நாளை மதியம் 1 மணிக்கும் திரும்பி வாருங்கள்’ என்றார். மாலையில், மீண்டும் குழந்தைகள் ஆலயத்திற்குத் திரும்பினர். அவர்கள் செபமாலையை செபிக்கும்படி அன்னை கேட்டார். மேலும் குருவிடம் சொல்லி தனக்கு ஒரு கெபியைக் கட்டவும், அங்கு தனக்கும், வானதூதருக்கும் (கபிரியேல்) சிலை வைக்கும்படியும் மரியா அறிவுறுத்தினார்.
மக்கள் நம்பும் வகையில் ஓர் அதிசயத்தை செய்யுமாறு ஜாக்குலின் அன்னையிடம் கேட்டார். (ஜாக்குலின், பிறப்பிலிருந்து குறுக்கு பார்வை கொண்டவர். மிகவும் கனமான கண்ணாடிகளை அணிந்திருந்தார். மற்றும் நீண்டகால கண் தொற்றுநோய்களால் அவதிப்பட்டார்.) அதற்கு மரியா இவ்வாறு பதிலளித்தார்: ‘நான் அற்புதங்களைச் செய்ய இங்கு வரவில்லை. செபிக்கச் சொல்லவே வந்தேன். இருப்பினும், நாளை நீ தெளிவாகப் பார்ப்பாய். இனி நீ கண்ணாடி அணியத் தேவையில்லை.’ அடுத்த நாள் காலையில், அன்னை சொன்னபடியே ஜாக்குலின் முற்றிலும் குணமடைந்தாள். டிசம்பர் 14 வரை 9 முறை இக்காட்சிகள் நீடித்தன.
திருவிழா நாள்: டிசம்பர் 8
செபம்: செபத்தின் அன்னையே! எங்களுக்கு செபிக்க கற்றுத் தருபவரும், எங்களுக்காக எப்பொழுதும் பரிந்து பேசி செபிப்பவரும் நீரே என்பதால், நாங்கள் செபத்தால் வெற்றியடைய எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.