Friday, 28 May 2021

வணக்க மாதம் : நாள் -28

 மலர்களின் அன்னை

(பிரா - இத்தாலி)



1336 டிசம்பர் 29 மாலை, இத்தாலியின் தூரின் நகரை நோக்கிய பாதையில் தனது முதல் குழந்தையை கருவில் சுமந்துகொண்டிருந்த எகிடியா மதிஸ் என்ற இளம் பெண் தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். பிரா என்னும் இடத்தினருகே அவள் வந்தபோது, சாலையில் உள்ள தூண்களில் ஒன்றில் குழந்தை இயேசுவுடன் கன்னி மரியா இருப்பதுபோன்ற ஒரு படம் இருந்தது. அதே நேரத்தில், அவள் தன்னை நோக்கி இரண்டு கூலிப்படையினர் வருவதைக் கண்டாள். எகிடியா அவர்களின் அச்சுறுத்தும் கண்களைப் பார்த்து மிகவே பயந்துபோனாள். இந்த கூலிப்படை வீரர்கள் தனக்கு தீங்கு விளைவிப்பார்கள் என்று இயல்பாக உணர்ந்தவளாய், அவள் அங்கே சாலையின் தூணில் இருந்த மரியாவின் படம் அருகே ஓடி, மரியாவினிடத்தில் தனக்கு உதவி செய்யும்;படி மன்றாடினாள்.

அப்போது தூணிலிருந்து ஒரு பிரகாசமான ஒளி தோன்றியது. அன்னை காட்சிதந்து கூலிப்படையினரை விரட்டினார். இச்சமயத்தில் மிகவே பயந்துபோயிருந்த அந்த இளம் பெண் பயங்கரமான அச்சூழ்நிலையின் மன அழுத்தம் காரணமாக அந்த இடத்திலேயே தனது குழந்தையைப் பெற்றெடுத்தாள். பின்னர் மரியா எகிடியாவைப் பார்த்து புன்னகைத்து, ஆறுதலளித்தார். 

குளிர்கால குளிரில் அவள் புதிதாகப் பிறந்த தனது குழந்தையை நெருக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தபோது, வழக்கத்திற்கு மாறாக தூணைச் சுற்றியுள்ள அப்புதரில் பருவத்திற்கு வெளியே பல வெள்ளை பூக்கள் முழுமையாக மலர்ந்திருந்ததை பார்த்தாள். பின்னர் நினைவு தெளிந்து, எகிடியா தனது பிறந்த குழந்தையுடன் வீட்டிற்கு ஓடினார். தனக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் அவர் உற்சாகமாக விவரித்தார். அனைவரும் பருவத்திற்கு வெளியே அதிசயமாய் வெள்ளை நிறத்தில் பூத்திருக்கும் கருப்பு முட்புதரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். 

சிலர் இந்த கதையை வெறும் புனிதமான புராணக்கதை என்று சொல்லி நிராகரிக்கக்கூடும். ஆனால் 1336 முதல் கிட்டத்தட்ட ஒவ்வொரு குளிர்காலத்திலும், இந்த கருப்பு முட்புதரில் விஞ்ஞான விளக்கங்களுக்கு மாறாக, டிசம்பர் 25 முதல் ஜனவரி 15 வரை வெண்ணிற பூக்கள் பூத்துக் குலுங்கும். 

திருவிழா நாள்: டிசம்பர் 29

செபம்: மலர்களின் அன்னையே! அறிவுக்கும் புத்திக்கும் எட்டாத அதிசயமான காரியங்களை எங்கள் வாழ்க்கையிலும் நீர் செய்து, எங்கள் வாழ்வும் மலர்ந்து மணம் வீசிட உதவிசெய்யும். ஆமென்.