நம்பிக்கையின் அன்னை
லீஜ் நாட்டில் அமைந்துள்ள டினாட் என்னும் நகரிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் ஒரு சிறிய ஊரில் செல்லஸ் என்பவரின் வீட்டிற்கு அருகில் இரண்டு அற்புதமான ஓக் மரங்கள் வளர்ந்திருந்தன. 1609 ஆம் ஆண்டில் இந்த இரண்டு பழைய மரங்களில் ஒன்று கில்லஸ் என்னும் மரம் வெட்டுபவரால் வெட்டிச் சாய்க்கப்பட்டது. மரத்தின் உட்புறத்தை பரிசோதித்த அம்மரம் வெட்டும் மனிதர், மூன்று இரும்புக் கம்பிகளுடன், ஒரு குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியின் மீது அமர்ந்த வண்ணம் இருக்கும் மண்ணால் செய்யப்பட்ட புனித மரியன்னையின் ஒரு சிறிய திருவுருவச் சிலையைக் கண்டார்.
முன்பு அந்த ஓக் மரம் இளமையாக இருந்திருந்த காலத்தில் அவ்வழியே பயணம் செய்திருந்த நல்ல கிறிஸ்தவர்களுள் எவராவது ஒருவர், அந்த மரத்தில் காணப்பட்ட ஒரு துவாரத்தில் இந்த மரியன்னையின் திருவுருவச் சிலையை வைத்திருக்க வேண்டும். பின்பு காலப்போக்கில் திறந்திருந்த அந்த துவாரம் படிப்படியாக மூடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு வளர வளர, அம்மரம் தன்னுடைய வயிற்றில் அச்சிறப்புக்குரிய மரியன்னையின் திருவுருவச் சிலையை சிதைவுறாமல் தாங்கியபடியே இருந்திருக்க வேண்டும் என்பதாக நம்பப்படுகிறது.
இந்நிகழ்வுக்குப் பின்னர், செல்லஸ் என்னும் அந்த உரிமையாளர் விரும்பியபடியே புனித கன்னி மரியாவுக்கு மரியாதை செலுத்துவதற்காக, அத்திருவுருவச் சிலையை மீண்டும் அங்கிருந்த மற்றொரு ஓக் மரத்தின்மீது நிறுவப்பட்டது. இந்த இரண்டாவது மரத்தில் நிறுவப்பட்ட கடவுளின் தாய் மரியாவின் திருவுருவத்தை ‘எங்கள் நம்பிக்கையின் தாய்’ என்ற தலைப்பில் மக்கள் வணங்கத் தொடங்கினர். பல அதிசயிக்கத்தக்க குணப்படுத்துதல்கள் அவ்விடத்தில் நடைபெற்றன. இவ்வாறு ஆச்சரியமூட்டும் அற்புதங்களால் விரைவில் திருப்பயணிகள் அந்த பகுதிக்கு பெருமளவில் வரத் தொடங்கினர்.
இப்பக்தி முயற்சியை ஒழுங்குபடுத்தும் நோக்கில், முதல் ஓக் மரத்திலிருந்து உண்மையான அன்னையின் திருவுருவத்தைப் போலவே ஒரு திருவுருவச் சிலையைச் செய்யச் சொன்னார். வியப்பூட்டும் வகையில் இரண்டாவதாக செய்யப்பட்ட அத்திருவுருவம் அப்படியே முதலாவதை ஒத்து இருந்தது. இந்த இரண்டாவது திருவுருவச் சிலையானது மறைமாவட்ட ஆயர் அவர்களால் பங்கு ஆலயத்தில் ஆடம்பரமாய் நிறுவப்பட்டது. 1622 ஆம் ஆண்டிலிருந்து இந்த நம்பிக்கை அன்னையின் பக்தி முயற்சி நாட்டின் பிற இடங்களுக்கும் பரவியது.
திருவிழா கொண்டாடப்படும் நாள்: ஜீலை 27
செபம்: அற்புதமாய் ஓக் மரத்தில் வீற்றிருந்த புனித அன்னையே! உம் கருணையும் கரிசனையும் எங்களுக்கு நிறைவாய் கிடைக்கட்டும். அன்றாட வாழ்வில் எங்களுக்கு அருளின் வாய்க்காலாய் நீரே இருந்தருளும். எங்கள் நம்பிக்கையில் நாளும் எங்களை புதுப்பித்தருளும். ஆமென்.