Tuesday, 4 May 2021

வணக்க மாதம் : நாள் - 4

    கண்ணீரின் அன்னை

                                                            (பிரேசில் - காம்பினா)



சமீபத்திய நூற்றாண்டுகளில், புனித மரியன்னை தன்னுடைய சில திருக்காட்சிகளில் கண்ணீர் வடித்தார் என்று அறிகிறோம். குறிப்பாக, 1846 ஆம் ஆண்டு, செப்டம்பர் 19, அன்று லா சலேத்தில் காட்சியளித்;தபோது மரியா கண்ணீர் சிந்தினார். 1953 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2 வரை இத்தாலியின் சிசிலியில் ஓர் ஏழைத் தொழிலாளியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த புனித மரியாவின் திருப்படத்தில் அன்னை மீண்டும் மீண்டும் கண்ணீர் வடித்தார். ஒரு முழுமையான நீண்ட விசாரணைக்குப் பின்னர் இத்தாலியின் சிசிலி ஆயர்கள் மாமன்றம் இந்த கண்ணீரின் அற்புதத்தை உறுதிப்படுத்தியது. அதைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் வந்தனர். மேலும் திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் வானொலியில் ஒரு முறை உரையாற்றும்போதும் இந்நிகழ்வைக் குறித்து, ‘ஓ மரியாவின் கண்ணீர்!’ என்று நெகிழ்ந்தார்.

1929 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, பிரேசிலின் காம்பினாவில் இருந்த இயேசுவின் திருக்காய வரம் பெற்றிருந்த அருள் சகோதரி அமலியா, தனது உறவினர் ஒருவருடைய மனைவி உடல்நிலை சரியில்லாமல், மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கேள்விப்பட்டு அவருக்காக வருத்தத்தோடு இயேசுவிடம் செபிக்க எண்ணினார். 

1929 ஆம் ஆண்டு, நவம்பர் 8 அன்று அருள்சகோதரி அமலியாவுக்கு நம் ஆண்டவர் அருளிய வார்த்தைகள்: ‘என் மகளே, என் தாயின் கண்ணீர் வழியாக எதைக் கேட்டாலும், நான் அன்பாகக் கொடுப்பேன்.’ 

1930 ஆம் ஆண்டு, மார்ச் 8 அன்று அருள்சகோதரி அமலியாவிடம் மிகவும் பரிசுத்தமான கன்னி மரியா இவ்வாறு கூறினார்: ‘இந்த கண்ணீரின் செபமாலை மூலம் பிசாசு அடங்கி, நரகத்தின் சக்தி அழிக்கப்படும். இந்த மாபெரும் போருக்கு உங்களை தயார்படுத்துங்கள்.’

இவ்வாறு அருள்சகோதரி அமலியாவுக்கு இறைவன் மற்றும் அவரது மிகவும் பரிசுத்தமான தாயாரால் இந்த கண்ணீரின் செபமாலை வெளிப்படுத்தப்பட்டது. மேலும் இது ஆயர் காம்போஸ் பாரெட்டோவால் இயற்கைக்கு அப்பாற்பட்டது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.



திருவிழா கொண்டாடப்படும் நாள்: சனவரி 24

செபம்: கண்ணீரின் அன்னையே! உம் திருமகன் இயேசுவின் சிலுவைப் பலியோடு, உமது ஈடு இணையற்ற கண்ணீரையும் இறைத் தந்தைக்கு காணிக்கையாக்கினீரே. உம்மைப்போல நாங்களும் எங்கள் கண்ணீரை மீட்புக்கானதாய் மாற்றிடவும், துன்பங்கள் மத்தியில் இயேசுவின் பாதையில் துணிவுடன் நடக்கவும் எங்களுக்கு அருள் பெற்றுத்தாரும். ஆமென்.