Wednesday, 5 May 2021

வணக்க மாதம் : நாள் -5

 முட்புதரின் அன்னை

(பிரான்ஸ் - மார்னே)



1400 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு திருவிழாவின் முந்திய நாள் இரவு, பிரான்சின் மார்னே என்னும் இடத்தின் அருகே ஆடு மேய்ப்பவர்கள் சிலர் தங்கள் கிடைகளை காவல் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் தூரத்தில் கண்ணைப் பறிக்கும் வெளிச்சம் ஒன்றைக் கண்டார்கள். 

அவர்கள் அந்த வெளிச்சம் வரும் இடத்தை நெருங்கியபோது, அது முட்புதரிலிருந்து வருகிறது என்பதையும், அம்முட்புதரின்  கிளைகளும் இலைகளும் தீப்பிழம்புகளால் பாதிக்கப்படவில்லை என்பதையும் கண்டார்கள். மேலும் தீப்பிழம்புகளுக்கு மத்தியில் சிறு பாதிப்புமில்லாமல் இருந்த புனித மரியன்னையின் திருவுருவச்சிலை ஒன்றையும் அவர்கள் பார்த்தார்கள். 

இந்த அதிசயம் அன்றிரவிலிருந்து மறுநாள் வரையிலும் தொடர்ந்தது. இச்செய்தி விரைவாக அப்பகுதி எங்கும் பரவியது. எரியும் புதரைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் திரண்டது, அது ஒரேபு மலையில் மோசே கண்ட முட்புதரை நினைவூட்டுகிறது. சலோன்ஸ் மறைமாவட்ட ஆயர் சார்லஸ் போய்ட்டர்ஸ் என்பவரும் எரியும் முட்புதரையும் அதிசயமான அந்த மரியன்னையின் திருவுருவச்சிலையையும் நேரில் கண்டதோடு, இரண்டும் நெருப்பால் பாதிக்கப்படவில்லை என்று சாட்சியம் அளித்தார். 

இறுதியாக தீப்பிழம்புகள் அணைந்த பின்பு, ஆயர் மிகுந்த பயபக்தியுடன் தனது கைகளில் அச்சிலையை எடுத்து, அருகிலுள்ள புனித யோவான் ஆலயத்தில் அதனை நிறுவினார். பின்னர் அதிசயம் நடைபெற்ற தளத்திலேயே ஓர் ஆலயம் கட்டப்பட பணிகள் தொடங்கின. இந்த ஆலயம் கட்டப்பட்டபோது, கட்டடத் தொழிலாளர்கள் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றபின் வானதூதர்கள் இரவில் கட்டட வேலையைத் தொடர்ந்து செய்தனர் என்று இப்பகுதியில் சொல்லப்பட்டுவருகிறது. 

அதிசயமான இந்த முட்புதரின் அன்னை மரியாவின் திருவுருவச் சிலைக்கு முடிசூட்டுவதற்கு திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ (சிங்கராயர்) உத்தரவிட்டார்.  



திருவிழா நாள்: பிப்ரவரி 16

செபம்: முட்புதரின் அன்னையே! எரியும் முட்புதரிலும் தீங்கின்றி நீர் பிரகாசித்தீரே. எங்கள் வாழ்க்கையில் நாங்களும் துன்பங்களால் புடமிடப்படும்போது, இறைநம்பிக்கையில் நலிவுறாமல் பிரகாசிக்கவும், தொடர்ந்து உம் திருமகனின் பாதையில் பயணிக்கவும் அருள் பெற்றுத் தாரும். ஆமென்.