ஒளியின் அன்னை
(எகிப்து – ஸெய்டுன்)
20 ஆம் நூற்றாண்டில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் மக்களால் பார்க்கப்பட்ட மரியாவின் திருக்காட்சியானது, 1917 ஆம் ஆண்டில் நடைபெற்ற புனித பாத்திமா அன்னையின் திருக்காட்சி என்று நினைக்கலாம். அங்கு சுமார் 70,000 மக்கள் அக்காட்சியைக் கண்டனர். ஆனால் 1968 முதல் 1971 வரை எகிப்தின் ஸெய்டுன் என்னும் இடத்தில் நடைபெற்ற அன்னையின் திருக்காட்சியை இன்னும் அதிகமான மக்கள் பார்த்தனர்.
திருக்குடும்பம் ஏரோதுக்கு பயந்து எகிப்துக்கு தப்பி ஓடியபோது, இடையே தங்கிச் சென்ற இடங்களில் ஸெய்டுன் என்பதும் ஒன்றென நம்பப்படுகிறது. ஏப்ரல் 2, 1968 முதல் மே 29, 1971 வரை, வாரந்தோறும் ஸெய்டுனில் உள்ள காப்டிக் திரு அவைக்குரிய புனித மரியாவின் ஆலயத்தின் மேல் அன்னை மரியா ஒளி வெள்ளத்தில் காட்சி அளித்தார். இது மூன்று ஆண்டுகளாக பெரும் கூட்டத்தினரால் உணரப்பட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட ஓர் அனுபவமாகும். இது ஒரு பெரும்பான்மையான முஸ்லீம் நாட்டில், இன்னும் குறிப்பாக ஒரு காப்டிக் ஆலயத்தில் நிகழ்ந்திருப்பதால் கத்தோலிக்கர்கள் அதைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.
மரியன்னை பிரகாசமான ஒளியில் ஒளிவட்டத்துடன் அவரது தலையில் ஒரு கிரீடம் அணிந்தவளாய் தோன்றினாள். சில சமயங்களில் குழுமியிருந்த சாட்சிகள் கையில் குழந்தை இயேசுவுடனோ, அல்லது சில சமயங்களில் பன்னிரெண்டு வயதான இயேசுவுடனோ, சில சமயங்களில் புனித யோசேப்புடனோ அன்னையைப் பார்த்தார்கள். இன்னும் சில நேரங்களில், அன்னை தனது கைகளில் ஒரு சிலுவையையோ அல்லது அமைதியின் சின்னமான ஒலிவ கிளையையோ சுமந்திருப்பதைக் கண்டதாக தெரிவித்தனர்.
இக்காட்சியைக் காண சில நாட்களில் இரவு நேரத்தில் 2,50,000 பேர் வருவார்கள் என்றும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காட்சி முடிவடைவதற்கு முன்பு, மில்லியன் கணக்கானவர்கள் அதைப் பார்த்திருந்தார்கள் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.
திருவிழா நாள்: ஏப்ரல் 2
செபம்: ஒளியின் அன்னையே! இருளின் சக்தியையும், அலகையின் சோதனைகளையும் முறியடிப்பவளே! காரிருளின் நடுவில் கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் தோன்றினீரே. எங்கள் வாழ்வில் எதிர்வரும் இருளின் சக்திகளை வெற்றிகொள்ளவும், அலகையின் சோதனைகளை முறியடிக்கவும் இறைவனிடமிருந்து எங்களுக்கு அருள் பெற்றுத் தாரும். ஆமென்.