மெழுகுதிரிகளின் அன்னை
(ஸ்பெயின் - கேனரி தீவுகள்)
கேனரி தீவுகளில் 1400 ஆம் ஆண்டில், புயலிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு குகைக்குள் நுழைந்த இரண்டு மேய்ப்பர்கள் மெழுகுதிரிகளின் அன்னையின் திருவுருவச் சிலையை அந்த குகைக்குள் கண்டனர். அவர்கள் இருவருமே இதற்கு முன்பு ஒரு சிலையை பார்த்ததில்லை, எனவே அது உயிருள்ள ஒன்றெனவே அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் மேய்த்த செம்மறி ஆடுகள் அத்திருவுருவச் சிலையைப் பார்த்து பயந்து, அக்குகைக்குள் நுழைய மறுத்தன. எனவே முதலில் இரண்டு மேய்ப்பர்களும் அந்த சிலையை அந்நியன் என்று நினைத்து வெளியேறும்படி கைகளை அசைத்தனர். ஆனால் அச்சிலையோ நகரவோ பதிலளிக்கவோ இல்லை. எனவே அவர்களில் ஒருவர் அதன் மீது வீச ஒரு பெரிய கல்லை எடுத்தான். அப்போது அவனால் அசைக்க முடியாதபடி உடனடியாக அவன் கைகள் விறைத்துப்போய், வலியால் துடிக்க ஆரம்பித்தான்.
மற்றொருவன் சிலைக்கு அருகில் நகர்ந்து சென்று பார்த்தான். அச்சிலை அவனைப் பார்ப்பதுபோல் தோன்றினாலும், அது நகரவில்லை, பேசவில்லை. அதனால் குழப்பமடைந்த அவன் கத்தியை எடுத்து அதன் விரலை வெட்ட முயன்றான். ஆனால் சிலையில் அவன் ஏற்படுத்த முயன்ற காயம் அவனது விரலிலே ஏற்பட்டது. விரலிலிருந்து பெருமளவில் இரத்தம் வரத் தொடங்கியது. பயந்துபோன அவ்விருவரும் தங்களுடைய ஆடுகளையும் அவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் அங்கேயேவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அவர்கள் தங்கள் தலைவரிடம் சென்று இவற்றைச் சொல்ல அவரோ அச்சிலையை கொண்டுவரும்படி அவர்களுக்கு கட்டளையிட்டார். இருவரும் குகைக்குத் திரும்பிச் சென்றபோது, சிலை அதே இடத்தில் இருந்தது. கைவிரலில் காயம்பட்டவன் சிலையைத் தொட்டவுடன், அவனது விரலின் காயம் உடனடியாக குணமடைந்ததைக் கண்டான். அச்சிலையை தலைவரிடம் எடுத்துப்போக, பின்பு தலைவரின் ஆணைப்படி அத்தீவின் பூர்வீகவாசிகள் பயபக்தியுடன் அச்சிலையை ஒரு வீட்டில் வைத்து மரியாதை செலுத்தினர். சில இரவுகள் கழித்து அச்சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து ஓர் இனிய இசை கேட்டது. அவர்கள் சென்று பார்த்தபோது விசித்திரமான ஒளிரும் தூதர்கள் மெழுகுதிரிகளை ஏற்றி அச்சிலையைச் சுற்றிலும் வைத்தனர். பூர்வீகவாசிகள் அதுவரை மெழுகுதிரிகளைப் பார்த்ததில்லை.
பின்பு 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினிலிருந்து கிறிஸ்தவ மறைப்பரப்பு பணியாளர்கள் வந்தபோது அச்சிலையை அங்கிருந்து திருடிச் சென்று தங்கள் ஆலயத்தில் வைத்தனர். ஆனால் அச்சிலை வைக்கப்பட்ட நகரில் கொள்ளை நோய் ஏற்பட்டது. சிலையும் மக்கள் பக்கம் பார்க்காமல் முழுவதுமாக சுவர் பக்கமாக திரும்பிக் கொண்டது. எனவே மீண்டும் அவர்கள் சிலையை அதன் பழைய இடத்திலேயே நிறுவினர்.
திருவிழா நாள்: செப்டம்பர் 17
செபம்: மெழுகுதிரிகளின் அன்னையே! எங்கள் வாழ்வில் இருள் சூழும் நேரங்களில் எல்லாம் நாங்கள் ஒளியாம் உம் திருமகனின் பேருதவியைக் கண்டுகொள்ள எங்களுக்கு அருள் பெற்றுத் தாரும். ஆமென்.