பாறையின் அன்னை
(ஸ்பெயின் - சலமன்கா)
15 ஆம் நூற்றாண்டில், பாரிஸைச் சேர்ந்த சைமன் என்ற இளைஞன், தன் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, தனக்குச் கிடைத்த செல்வத்தை திருச்சபை மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினான். மிகவும் பக்தியுள்ள அவர், கன்னி மரியாவின் பலிபீடத்தின் முன் பல மணி நேரம் செபிப்பார். ஒரு முறை அப்படி செபிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் தூங்கிவிட்டார்.
அவர் தூக்கத்திலிருந்து விழித்தபோது ‘இனி உன் பெயர் சைமன் வேலா’ என்று ஒரு குரல் கேட்டது. அத்தோடு அவர் பேனா டி ஃபிரான்சியாவுக்குச் உடனடியாகச் செல்ல வேண்டும் என்றும், அங்கு அவர் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவின் சிலையைக் கண்டுபிடிப்பார் என்றும் அந்தக் குரல் அவரிடம் கூறியது.
ஒரு பெரிய முயற்சியின் பின்னர், அவர் இறுதியாக பேனா டி ஃபிரான்சியாவுக்கு வந்தார். அந்தக் குரல் மீண்டும் அவரிடம் பேசியது. அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோண்டவும், அதற்கு அவ்வூரின் ஆண்களின் உதவியைப் பெறவும் அக்குரல் அவருக்குச் சொன்னது. இவ்வாறு அவர் முன்னதாகவே அச்சிலையை அங்கே வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு எதுவும் எழுப்படாது என்பதற்காக அவர் அக்குரலால் அறிவுறுத்தப்பட்டபடி செய்தார்.
அவ்வாறே அவருக்கு உதவ பல நகர மக்களை சேர்த்துக் கொண்டார். மே 19, 1434 அன்று, ஒரு பெரிய பாறையை அகற்றியபின், ஆசீர்வதிக்கப்பட்ட புனித கன்னி மரியா தனது கையில் குழந்தை இயேசுவைப் பிடித்திருக்கும்படியான ஒரு திருவுருவச் சிலையை அவர்கள் அங்கே கண்டார்கள். பாறைக்கு அடியிலிருந்து கிடைத்ததால் அந்த அன்னையின் திருவுருவத்தை பாறையின் அன்னை என்றே அன்புடன் அழைத்து வணங்கத் தொடங்கினர்.
திருவிழா நாள்: பிப்ரவரி 23
செபம்: பாறையின் அன்னையே! எங்கள் வாழ்வில் துன்பங்கள் என்னும் பாறைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இறைவனின் ஆசீர்வாதங்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ள உம் திருமகனிடமிருந்து அருள் பெற்றுத் தாரும். ஆமென்.